May 10, 2017 தண்டோரா குழு
கட்டுப்பாடு என்ற பெயரில் நீட் தேர்வு எழுதிய மாணவ மாணவிகளின் சுய மரியாதையை இழக்க செய்த மத்திய அரசுக்கு கேம்பஸ் ஃப்ரண்ட் ஆப் இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச்செயலாளர் அப்துர் ரஹ்மான் வெளியிட்ட கண்டன அறிக்கையில்,
“ஆண்டுத்தோறும் தமிழக அரசு சார்பாக நடைபெற்று வரும் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு முறையை உதாசீனப்படுத்துவதோடு, பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியிலே மத்திய அரசு இந்த தேசிய அளவிலான பொது நுழைவு தேர்வினை (NEET) கடந்த மே 7 அன்று நடத்தியது.
இந்திய அளவில், இந்த தேர்வை 11 லட்சம் பேர் எழுதுகின்றனர். நாடு முழுவதும் 104 நகரங்களில், 2,200 மையங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை 88 ஆயிரத்து 478 பேர் இந்த தேர்வை எழுதுகின்றனர்.
கிராமப்புற மாணவர்களுக்கு சரியான விதிமுறைகளை வழங்காத இந்த நீட் தேர்வாணையம் ,தேர்வு எழுத வந்த மாணவர்களின் சட்டையை கிழித்தது , மெட்டல் டிடெக்டர் உபயோகப்படுத்தியது, டார்ச் கொண்டு தலைமுடியில் காதுகளிலும் சோதனையிட்டது ,பெண்களுக்கு துப்பட்டா அனுமதியின்மை, இஸ்லாமிய பெண்களின் பர்தா அணிய தடை போன்ற கெடுபிடிகளை மேற்கொண்டது .
எல்லாவற்றிற்கும் மேலாக கேரளாவில் ஒரு மாணவியின் உள்ளாடைகளை அகற்ற வேண்டுமென தேர்வு அதிகாரிகள் கட்டாயப்படுத்தியுள்ளனர். இதுபோன்ற செயல்களின் மூலமாக மத்திய அரசினுடைய அநாகரிகமான அகோரித்தனம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மத்திய அரசின் மாணவர்கள் மீதான இந்த அவ நம்பிக்கையை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மிக வன்மையாக கண்டிக்கிறது .
இது போன்ற இழிவான செயல்களை மத்திய அரசு நிறுத்திக்கொள்வதோடு , உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் சம்பந்த பட்ட தேர்வு அதிகாரிகள் உடனடியாக பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும். தமிழக மாணவர்களின் தலைகுனிவிற்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டுமென கேட்டுக்கொள்வதோடு உடனடியாக நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற வேண்டுமென கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு கூறியுள்ளார் .