May 11, 2017 தண்டோரா குழு
சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பரும், அரசு ஒப்பந்ததாரருமான சுப்பிரமணியம் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய கடிதம் கிடைத்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் தமிழக சுகாதார அமைச்சர் விஜய பாஸ்கரின் வீடு,குவாரி, அலுவலகம் ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அதே நேரத்தில் அமைச்சரின் உறவினர்கள் மற்றும் அவரது நண்பரான சுப்ரமணியம் ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில் கடந்த மாதம் 8ம் தேதி அமைச்சர் விஜய பாஸ்கரின் நண்பரான சுப்ரமணியம் தோட்டத்தில் மர்மமான முறையில் இறந்துக் கிடந்தார். பிரேத பரிசோதனை முடிவில், அவர் தற்கொலை செய்து கொண்டு இறந்தது தெரியவந்தது.
இந்நிலையில் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக சுப்ரமணியம் எழுதிய கடிதத்தை அவரின் உறவினர்கள் இன்று வெளியிட்டனர்.அவர் எழுதிய கடிதத்தில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் தனக்கும் தொடர்பில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் பி.எஸ்.கே. தென்னரசு என்பவருக்கும் தனக்கும் ஏற்பட்ட தொழில் போட்டியால் என்னைப் பற்றி தவறான தகவல்களை பரப்பி வந்தார். அவர் கொடுத்த பொய்யான தகவல்களின் காரணமாக என் வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள் என்று அந்தக் கடிதத்தில் எழுதியுள்ளார்.
சுப்பிரமணியம் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக உயர் அதிகாரிகள் 13 பேருக்கு கடிதம் எழுதி உள்ளதும் தெரிய வந்துள்ளது.