May 11, 2017 தண்டோரா குழு
போக்குவரத்துக் கழகங்களுக்கு தமிழக அரசு செலுத்த வேண்டிய நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது;
” தமிழக அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் வரும் 15-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்துள்ளார்கள்.
56 சதவிகிதம் மாநில அரசாங்கம் அறிவித்துள்ள கட்டணச் சலுகைக்காக கொடுக்கப்பட வேண்டும். ஆனால் இதுவரையிலும் அந்த நிதி முறையாகவும், முழுமையாகவும் போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்கப்படுவதில்லை. இதனால் போக்குவரத்துக் கழகங்கள் கடுமையான நிதிநெருக்கடியை சந்தித்து வருகின்றன.
இன்சூரன்ஸ் நிறுவனங்கள், வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றில் தொழிலாளிகள் வாங்கிய கடனுக்காக திருப்பிச் செலுத்திய பணத்தை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அளிக்காமல் போக்குவரத்துக் கழகங்கள் தங்களின் நிதி நெருக்கடியை சமாளிக்க பயன்படுத்தியுள்ளன.
மாநில அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்க வேண்டிய ரூ.7000 கோடி இன்னும் வழங்காததால் போக்குவரத்துக் கழகங்கள் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளன. இதனால் போக்குவரத்துக் கழகங்கள் தொழிலாளர்களுக்கு அளிக்க வேண்டிய பணப் பயன்களை வழங்கவில்லை. போக்குவரத்துக் கழகங்கள் அன்றாடச் செலவுகளுக்கே திண்டாடும் நிலையில் உள்ளன.
இதையெல்லாம் கவனத்தில் கொண்டு தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு தரவேண்டிய நிதியை உடனடியாக வழங்க வேண்டுமென்று போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் நீண்ட காலமாக போராடி வருகிறார்கள். இதை பற்றி கவலைப்படாத நிலையில் தமிழக அரசு உள்ளது.
போக்குவரத்துக் கழக ஊழியர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானதாகும். எனவே தமிழக அரசு உடனடியாக போக்குவரத்துக் கழக ஊழியர் சங்க பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதோடு போக்குவரத்துக் கழகங்களுக்கு தான் செலுத்த வேண்டிய நிதியை உடனடியாக வழங்க வேண்டுமெனவும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள ஊதிய உயர்வையும் உடனடியாக வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.”
இவ்வாறு அறிக்கையில் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.