May 11, 2017 தண்டோரா குழு
மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் பகுதிகளில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க மாட்டோம் என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உத்தரவாதம் அளித்தது.
தேசிய நெடுஞ்சாலைகளில் மதுபானக் கடைகளை நடத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையடுத்து,தமிழகத்தின் அனைத்து நெடுஞ்சாலை பகுதிகளில் அமைந்திருந்த சுமார் 3000 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.
இதனையடுத்து நெடுஞ்சாலைகளில் அகற்றப்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகளை குடியிருப்பு பகுதிகளுக்குள் தமிழக அரசு திறக்கிறது. இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜரான தமிழக அரசு வழக்கறிஞர்,
போக்குவரத்து உள்ளிட்ட எந்த ஒரு இடையூறும் இல்லாத இடங்களில் தான் டாஸ்மாக் மதுபானக் கடைகளை தமிழக அரசு திறக்கிறது. குடியிருப்பு பகுதிகளில் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டாலோ, அல்லது மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் இடங்களிலோ மதுபானக் கடைகள் திறக்கப்படாது என்று தமிழக அரசின் சார்பாக உறுதி அளித்தார்.