May 12, 2017 தண்டோரா குழு
கோவை சிறையில் பிளஸ் டூ தேர்வு எழுதிய 13 கைதிகளில் 10 கைதிகளும், குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்கபட்ட மாணவர்களில் தேர்வு எழுதிய 9 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில்,கோவை சிறையில் தேர்வு எழுதிய 13 கைதிகளில் 10 கைதிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆயுள் தண்டனை கைதி வேல் முருகன் என்பவர் ஆயிரத்து 6 மதிப்பெண்களும், பூபதி என்ற கைதி 965 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.
அதைபோல், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்ட குழந்தைகளில் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய 9 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் திருப்பூர் மாவட்டம் வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்த ராமநாதன் என்ற மாணவர் ஆயிரத்து 50 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார். 3 ம் வகுப்பு படிக்கும் போது குடும்ப வறுமையின் காரணமாக மில்லிற்கு வேலைக்கு செல்ல நேர்ந்ததாக கூறிய ராமநாதன், குழந்தை தொழிலாளர்களே இருக்கக்கூடாது என்பதே தன் விரும்பம் என தெரிவித்தார்.
குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்ட மாணவர்கள் தேர்வுகளில் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளும், தன்னம்பிக்கை பயிற்சிகளும் அளிக்கப்பட்டடு தேர்ச்சி பெற உதவியதாகவும் தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குநர் விஜயகுமார் தெரிவித்தார்.
திருப்பூரை சேர்ந்த ராமநாதன் என்ற குழந்தை தொழிலாளியாக இருந்து மீட்கப்பட்ட மாணவர் ஆயிரத்து 50 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார்