May 13, 2017 தண்டோரா குழு
உத்தர பிரதேசத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், சனிக்கிழமைகளில் புத்தக பைகளை பள்ளிக்கு கொண்டு வர தேவையில்லை என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இதுக்குறித்து உத்தர பிரதேசம் மாநிலத்தின் துணை முதலமைச்சர் தினேஷ் ஷர்மா வெளியிட்டுள்ள அறிக்கையில்
“சனிக்கிழமைகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் புத்தக பைகளை பள்ளிக்கு எடுத்துக்கொண்டு வர தேவையில்லை. அன்று ஆக்கப்பூர்வமான செயல்களில் அவர்கள் ஈடுபட்டு மகிழலாம். இது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு இடையே நல்ல பிணைப்பை கொண்டு வரும். அதோடு மாணவர்களுக்கு நல்ல ஆளுமை வளர்ச்சிக்கு வித்திடும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
உத்தர பிரதேஷ் மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மாநில அரசு பள்ளி மாணவர்கள் அணியும் காக்கி சீருடைகளுக்கு தடைவித்துள்ளார். அம்மாநிலத்தில் உள்ள 75 மாவட்டத்திலுள்ள 1.68 அரசு பள்ளிகளில் சுமார் 1.78 லட்சம் மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். வரும் ஜூன் மாதத்தில் தொடங்கும் கல்வி ஆண்டு முதல் புதிய சீருடைகள் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் எனக் கூறியுள்ளார்.
மாணவர்களுக்கு பழுப்பு நிற கால்சட்டை, இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை கட்டம்போட்ட மேல் சட்டையும், மாணவிகளுக்கு பழுப்பு நிற பாவடையும், மாணவர்களை போன்ற மேல் சட்டையும் சீருடையாக தரப்படும். மேல்நிலை பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் பழுப்பு நிற சல்வார் பேண்ட், சிவப்பு குர்த்தா மற்றும் பழுப்பு துப்பட்டா அணிய வேண்டும் என தகவல் வெளியாகியுள்ளது.
பள்ளி மாணவர்கள் அணியும் காக்கி சீருடையை பார்க்கும்போது, காவலர்கள் அணியும் சீருடை போல் அது இருக்கிறது என்று முதல்வர் வருத்தம் தெரிவித்ததையடுத்து, இந்த சீருடை மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
2௦12-ம் ஆண்டு, உத்தர பிரதேஷ் மாகாணத்தில் சமாஜ்வாடி கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, காக்கி உடைகளை பள்ளிகளில் அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.