May 15, 2017 தண்டோரா குழு
பல்லடம் அருகே விசைத்தறி தொழிலாளி மற்றும் அவரது மகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவருக்கும் மரண தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர் விசைத்தறி தொழிலாளியான தங்கவேல்.இவர் செல்வம் என்பவரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் கடனை திருப்பி செலுத்த முடியாததால் தங்கவேலுவிடம் செல்வம் தகராறு செய்துள்ளார். இதையடுத்து கடந்த 2015 ம் ஆண்டு தன்னுடைய கூட்டாளிகளுடன் வந்த செல்வம்,தங்கவேலுவையும், அவரது மகளையும் கடத்தி சென்றுள்ளனர்.
இதில் பல்லடத்தில் வைத்து தங்கவேலுவை எரித்து கொலை செய்துள்ளனர். பின்னர் தங்கவேலுவின் மகளை கோவைக்கு கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து செல்வத்தையும் அவரது கூட்டாளிகளையும் போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு திருப்பூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி முகமது ஜியாவுதீன், குற்றஞ்சாட்டப்பட்ட செல்வம் மற்றும் தங்கராஜ் ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.
மேலும், குற்றச்சாட்டில் தொடர்புடைய தெய்வசிகாமணி, நாகராஜ், ஆனந்தன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.