May 2, 2016 தண்டோரா குழு
கருவிலிருந்த சிசுவைக் கொன்ற குற்றத்திற்காக கொலராடோ பெண்மணிக்கு 100 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
டைனல் லேன் என்னும் 35 வயது பெண்மணி நர்ஸாகப் பணி புரிந்தவர். அவரது உரிமம் காலாவதியான காரணத்தினால் பணியிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு 2
பருவமடைந்த பெண்கள் உள்ளனர். அவர் அவரது தோழருடன் வசித்து வந்தார்.
சம்பவத்தன்று, மிச்சேல் வில்கின்ஸ் என்னும் 7 மாத கர்ப்பிணிப் பெண்ணை, லேன், தனது வாய் ஜாலத்தினால் மயக்கி, டென்வர் அருகிலுள்ள லாங்க்மான்ட் என்னும் இடத்தில் அமைந்துள்ள தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
சென்றதும் அவரை அடித்து, உதைத்து, கொடுமைப் படுத்தியுள்ளார். உச்சக்கட்டமாக வில்கின்ஸின் வயிற்றைக் கிழித்துக் கருவிலிருந்த குழந்தையை எடுத்துள்ளார். லேனினின் முரட்டுத் தனமான செயலால், அந்தச் சிசு இறந்து விட்டது.
டைனல் லேன், தான் கருவுற்றிருப்பதாகத் தனது சகாவிடம் கூறியுள்ளார். அதனால் மருத்துவரிடம் பரிசோதனைக்காகக் கூட்டிச்செல்லும் பொருட்டு அவரது தோழர் முன்னதாகவே வீடு திரும்பியுள்ளார்.
வீடு திரும்பிய அவர் தனது தோழி உடல் முழுவதும் இரத்தத்துடனும், இறந்த குழந்தையை கையில் ஏந்தியும் நிற்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
குறைப்பிரசவம் ஆகியிருக்க வேண்டுமென்று கருதி, லேனையும், இறந்த சிசுவையும் உடனே மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அதே சமயம் கீழ்த் தளத்தில் மிச்சேல் இரத்தப் பெருக்கோடு நின்று கொண்டிருந்ததை அவர் கவனிக்கவில்லை. மிச்சேல் எவ்வாறோ சமாளித்து உள் அறைக்குச் சென்று, நெருக்கடி சேவையின் எண்ணான 911 யை தொடர்பு கொண்டு உதவிக் கோரியுள்ளார்.
அவர்களும் உடனே வந்து மிச்சேலை, லேன் சென்ற மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
விசாரணையின் போது டைனல் லேன், மிச்சேல் தான் தன்னை முதலில் தாக்கியதாகவும், தான் தற்காப்புக்காகத்தான் சண்டையிட்டதாகவும் கூறியுள்ளார்.
மற்றும் சண்டையின் போது கருவிலுள்ள சிசுவிற்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டுவிடக் கூடாதென்ற காரணத்தினால் தான், வயிற்றைக் கிழித்துச் சிசுவை எடுத்ததாகவும் கூறியுள்ளார்.
இதைப் பற்றி அவரது தாயார் கூறுகையில், லேன் தனது நீரில் மூழ்கி இறந்த மகனின் நினைவிலிருந்து வெளிவர முடியாமல் தவிப்பதாகவும், எப்படியும் தனக்கு ஒரு குழந்தை வேண்டுமென்ற ஆதங்கத்திலும் புத்தி பேதலித்து இவ்வாறு நடந்து கொண்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.
வழக்கறிஞர் வாதாடுகையில் கர்ப்பப்பையிலிருந்து வெளி வந்து வாழும் நிலைக்கு வந்த உயிரைக் கொல்வதே கொலை என்றும், கர்ப்பத்திலிருந்த சிசுவை அழிப்பது கொலையாகாது என்றார்.
மிச்சேலின் தந்தை இதை மூர்க்கத்தனம் என்று விமரிசித்துள்ளார்.
ஆனால் போல்டர் நீதிபதி மரியா பெர்கன், இச்செயல் மிகவும் இரக்கமற்ற, கொடூரமான செயல் என்றும், இது போன்ற ஒரு செயலை யாரேனும் செய்ய முடியுமா என்று கற்பனை செய்வதே கடினம் என்று கூறினார்.
விசாரணையின் முடிவில் டைனல் லேனுக்கு 100 வருடச் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.
தண்டனைச் சரியானது தானென்றும், லேன் இந்தச் சமூகத்தில் வாழ்வதற்கு உரிமையற்றவரென்றும் மிச்சேல் கருத்துத் தெரிவித்தார்.