May 16, 2017 தண்டோரா குழு
ராஜஸ்தான் மாநிலத்தில் ஒசாமா பின்லேடனுக்கு ஆதார் கார்டு எடுக்க முயற்சி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
இந்திய குடிமகன்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை அவசியம் என மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இதற்காக மத்திய அரசின் ஆதார் அட்டைக்கு பொதுமக்கள் விண்ணப்பிக்க நாடு முழுவதும் தனியார் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இம்மையங்களில் இருந்து பெறப்படும் தகவல்களை பரிசீலித்து ஆதார் அட்டை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டம் மண்டல் பகுதியிலுள்ள ஒரு தனியார் தகவல் பதிவு மையத்திலிருந்து அமெரிக்க ராணுவத்தால் கொல்லப்பட்ட அல்கொய்தா இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடன் பெயரில் ஆதார் அட்டை கேட்டு விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அம்மையத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவரே பின்லேடனின் புகைப்படம் மற்றும் தகவல்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்து ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்திருந்தது தெரியவந்தது.
இதனைத்தொடந்து போலியான தகவல்களை அரசு பதிவேடுகளின் பதிவு செய்ததாக அந்நபரை போலீசார் கைது செய்தனர்.மேலும், இச்சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.