May 17, 2017 தண்டோரா குழு
கோவை மாநகரை போக்குவரத்து நெரிசல் இல்லாத நகரமாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்படும் என்று புதிதாக பொறுப்பேற்றுள்ள கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை துணை ஆணையாளர் எம்.துரை கூறியுள்ளார்.
கடந்த 13-ம் தேதி தமிழகம் முழுவதும் 17 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. அந்த உத்தரவில் கோவை மாநகரில் போக்குவரத்து துணை ஆணையராக பணியாற்றி வந்த எஸ். சரவணன் சென்னை பெருநகர தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து கோவை மாநகரின் புதிய போக்குவரத்து காவல்துறை துணை ஆணையராக எம். துரை நியமிக்கப்பட்டார். இதனிடையே இன்று அவர் பதவியேற்பதற்காக கோவை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்தார்.
காவல்துறை அதிகாரிகள், பூங்கொத்து கொடுத்து அவரை வரவேற்றனர். பின்னர், கோப்புகளில் கையொப்பம் இட்ட அவர் கோவை மாநகரின் போக்குவரத்து காவல்துறை துணை ஆணையராக பதவியேற்றுக்கொண்டார்.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில்
“கோவையில் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க பொதுமக்களிடம் வலியுறுத்தப்படும். கோவை மாநகரை போக்குவரத்து நெரிசல் இல்லாத நகரமாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்படும் “ என்றார்.
முன்னாள் கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை துணை ஆணையாளராக இருந்து வந்த எஸ். சரவணன் வரும் திங்கட்கிழமை சென்னையில் பதிவியேற்றக்கவுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.