May 18, 2017 தண்டோரா குழு
இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷண் ஜாதவிற்கு பாகிஸ்தான் நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை நிறுத்த வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஓய்வுபெற்ற இந்திய கடற்படை அதிகாரியான குல்பூஷண் ஜாதவ் பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். ஆனால் தன் மீதான குற்றச்சாட்டை ஜாதவ் மறுத்தார்.
எனினும் பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. இந்தியாவின் எந்த கோரிக்கையையும் ஜாதவ் விவகாரத்தில் பாகிஸ்தான் ஏற்கவில்லை.
இந்த விவகாரத்தில் இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை அணுகியது. இதையடுத்து சர்வதேச நீதிமன்றம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்தது. இதையடுத்து, இருதரப்பிலான வாதங்கள் முடிவடைந்த நிலையில் நெதர்லாந்தின் ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றம் ஜாதவ் விவகாரத்தில் இன்று தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தது.
இந்நிலையில்,11 நீதிபதிகள் கொண்ட சர்வதேச நீதிமன்றம் ஜாதவ் விவகாரத்தில் இன்று தீர்ப்பு வழங்கியது.அதில், இறுதி தீர்ப்பு அளிக்கும் வரை ஜாதவிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க பாகிஸ்தானிற்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது.மேலும் குல்பூஷண் ஜாதவை தூதரகம் மூலம் அணுக இந்தியாவுக்கு உரிமை உள்ளது என்றும் சர்வதேச நீதிமன்றம் தெரிவித்தது.