May 3, 2016 தண்டோரா குழு
குடிக்கும் பானமான காப்பி விற்பனையில் மாபெரும் புகழ் பெற்ற நிறுவனமான ஸ்டார் பக்ஸ் நிறுவனத்தின் மீது, சிகாகோ பெண்மணி ஒருவர் 5 மில்லியன் டாலருக்கு வழக்குத் தொடுத்துள்ளார்.
குவளையின் கறுப்புக் கோடு வரை பானம் நிரப்ப வேண்டுமென்பது வரை முறை. ஆனால் நடை முறையில் பானம் பாதியளவே நிரப்படுகிறது என்றும், மீதி பனிக்கட்டித் தண்ணீரினால் நிரப்பப்படுகிறது என்றும் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் பானத்தின் விலை ஐஸ் கட்டித் தண்ணீருக்கும் வசூலிக்கப்படுகிறது என்பது வாதம்.
குடிக்கும் பானமான காப்பி, டீ, மற்றும் பிற பானங்களுக்கு நிர்ணயித்த விலையை விட அதிகமாக வசூலிப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
24 அவுன்ஸ் பானத்திற்கு, 14 அவுன்ஸ் பானமும் மீதியுள்ள அளவிற்கு பனிக்கட்டித் தண்ணீரும் நிரப்புவதாகக் கூறியுள்ளார். ஆனால் வாடிக்கையாளர்களிடம் 24 அவுன்ஸ் பானத்திற்குள்ள தொகையை வசூலிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஸ்டேசி பிங்கஸ் கூறும்போது, குடிக்கும் பானத்திற்கு நிர்ணயித்த விலையை ஐஸ் தண்ணீருக்கு வசூலிப்பது ஏமாற்று வேலையாகும் எனத் தெரிவித்தார்.
மேலும், விளம்பரத்தின் படி பானத்தின் அளவு இருப்பதில்லை. குறைவாகவே தரப்படுகிறது எனவும் குற்றம் சாட்டினார்.
பெரிய குவளையை உபயோகிப்பதன் மூலம் விளம்பரத்தில் அறிவித்த அளவு பானமும், அதற்குத் தேவயான அளவு ஐஸ் கட்டிகளும் உபயோகிக்க முடியும் என்றும் யோசனை தெரிவித்துள்ளார்.
ஸ்டார் பக்ஸ் நிறுவனம் இக்குற்றச் சாட்டுக்களை மிகவும் அற்பத்தனமானது என்றும், தகுதியற்ற குற்றச்சாட்டு என்றும் ஒதுக்கியுள்ளது.
குளிர் பானங்களுக்கு ஐஸ் கட்டிகள் எவ்வளவு இன்றியமையாதது என்பதை தங்கள் வாடிக்கையாளர்கள் நன்கு அறிவார்கள் என்று கூறியுள்ளது. அது மட்டுமல்லாது வாடிக்கையாளர்கள் திருப்தி அடையவில்லை எனில், மீண்டும் புதிதாகச் செய்வதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் கூறியுள்ளது.
இதுவரையில் ஸ்டார் பக்ஸ் நிறுவனத்திற்கு உலகளவில் 23,000 கிளைகள் இருப்பதாகவும், 2015ல் 19.2 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இது 2014 ம் ஆண்டைவிட 16.5% அதிகம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.