May 19, 2017
மூளை வளர்ச்சி குன்றிய மகனை உற்சாகப்படுத்தி பிரபல ஹார்வர்ட் சட்ட கல்லூரியில் சேர அவனுடைய தாயார் உதவி செய்துள்ளார்.
சீனா நாட்டை சேர்ந்த ஜோ ஹோங்கன் என்பருக்கு டிங் டிங் என்னும் 29 வயது மகன் உண்டு. ஆனால் டிங் டிங் பிறக்கும்போதே மூளை வளர்ச்சி குன்றியிருந்தது. அவனை காப்பாற்றுவதால் எந்த பயனும் இல்லை என்று மருத்துவர்கள் அவனுடைய பெற்றோரிடம் கூறியுள்ளனர். அவனுடைய தந்தையும் மருத்துவர்களுக்கு ஆதரவு அளித்தார்.
குடும்பத்தை காப்பாற்றவும் மகனுக்கு நல்ல சிகிச்சை அளிக்கவும், அவனுடைய தாயார் பல வேலைகளை செய்தார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் மகனை மறுவாழ்வு அமர்வுகளுக்கு அழைத்து சென்றார். அவனுடன் கல்வி விளையாட்டுக்கள் விளையாடவும், அவனுடைய கடினமான தசைகளால் உண்டாகும் வலியை எப்படி குறைப்பது என்று கற்றுக்கொடுத்தார்.
2011ம் ஆண்டு, சீனாவின் பீகிங் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பள்ளியில் சுற்றுச்சூழல் அறிவியல் பாடத்தில் இளநிலை பட்டம் பெற்றார் டிங் டிங். அதைத்தொடர்ந்து, அதே பல்கலைக்கத்தின் சர்வதேச சட்ட பள்ளியில் முதுநிலை படிப்பிற்கு சேர்ந்தார்.
ஆனால், அதில் தொடர்ந்து பயில முடியாத காரணத்தால், இரண்டு ஆண்டுகள் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்தார். 2௦16ம் ஆண்டு ஹார்வர்ட் சட்ட கல்லூரி அவரை ஏற்றுக்கொண்டது.
“நான் ஹார்வர்ட் சட்ட கல்லூரியில் சேர்வேன் என்று கனவிலும் நினைத்ததில்லை. முயற்சி செய்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று என்னுடைய தாயார் என்னை ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தார். எனக்கு சந்தேகம் ஏற்படும் போதெல்லாம், அதை என் தாயார் தெளிவாக விளக்குவார். வாழ்கையில் முன்னோக்கி செல்லும் முறைகளை எனக்கு கற்றுத் தந்தார்” என்று டிங் டிங் கூறினார்.