May 5, 2016 தண்டோரா குழு
குழந்தை குடிக்கும் தாய்ப் பாலின் அளவை அறிந்து கொள்வது என்பது எல்லாத் தாய்மார்களுக்கும் ஒரு மிகப் பெரிய சவாலாகும்.
குழந்தையின் வயிறு நிறைந்ததா, இல்லையா என்று தாய் மனம் அலை பாயும். இச்சங்கடத்தைத் தீர்க்க இதோ வந்து விட்டது ஒரு போன் ஆப்(app).
போதுமான பால் சுரக்காவிடில்,குழந்தைகள் தாய்மார்களின் மார்பகத்தைக் காயப்படுத்துவது தவிர்க்க முடியாத ஒன்று.
பால் சுரக்கும் அளவைக் கணக்கிட முடியாத காரணத்தினாலும், குழந்தை உட்கொள்ளும் அளவைக் கணிக்க முடியாத காரணத்தினாலும், பெரும்பாலும் தாய்மார்கள் புட்டிப் பாலுக்கு மாறிவிடுகிறார்கள்.
புட்டிப் பால் கொடுப்பதின் மூலம் குழந்தை உட்கொள்ளும் அளவு தாய்க்கு நிதர்சனமாகத் தெரிகிறது.
ஆனால் தாய்ப் பாலுக்கு எப்போதுமே புட்டிப் பால் ஈடாகாது.
சில தாய்மார்கள் தங்கள் தாய்ப் பாலை சேகரித்து, குளிர் சாதனப் பெட்டியில் வைத்து, புகட்டுவதன் மூலம் அளவை அறிந்து கொள்கிறார்கள்.
ஆனால் புதிதாக உடனுக்குடன் சுரக்கும் தாய்ப் பாலைப் புகட்டும் போது அளவை நிணயிப்பது கடினம்.
ஆகவே தாய்ப் பாலை முடிந்த அளவு கொடுப்பதற்காக, குழந்தை உட்கொள்ளும் பாலின் அளவைக் கணிக்கும் வண்ணமும், பாலின் வரத்துக் குறையும் போது உணர்த்தும் வண்ணமும், கொண்ட ஒரு ஆப்(app)ஐ மாம் சென்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அது ஒரு சிறிய கருவி. அந்தக் கருவியிலிருக்கும் இரு கம்பிகளை நம் இரு காதுகளிலும் பொருத்திக் கொள்ள வேண்டும். கருவியின் வேறு ஒரு பாகம் குழந்தையின் காதருகிலும், மற்றொன்று நமது கைப்பேசியிலும் இணைக்கப்பட வேண்டும்.
குழந்தை பாலை உறிஞ்சும் சத்தமும், உறிஞ்சும் தன்மையும், விழுங்கும் சத்தமும், துல்லியமாக அந்த ஆப்பில் பதிவு செய்யப்படும்.
திரையுடன் இணைக்கும் பட்சத்தில், திரையில் கண்காணிக்கலாம்.
இதனால் மேற் சொன்ன குறைகளைத் தவிர்க்கலாம்.
மேலும் குழந்தை சரியான முறையில் உறிஞ்சாமல் இருந்தாலோ, பாலின் ஒழுக்கம் சரிவர இல்லாமல் இருந்தாலோ, இதன் மூலம் கண்டறிந்து சரி செய்து கொள்ளலாம்.
இந்த ஆப்பின் மூலம் குழந்தைகள் பால் உட்கொள்ளும் அளவு, உட்கொள்ள வேண்டிய அளவு, மற்றும் எடை போன்ற பல விஷயங்களையும் கண்காணிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.