May 26, 2017 தண்டோரா குழு
மதுராவில் கிருஷ்ணருக்கு புண்ணியஸ்தலம் மற்றும் மாட்டுக்கொட்டகை கட்ட, பூல்வாட்டி என்னும் மூதாட்டி, ரூ40 லட்சத்தை தானமாக தந்துள்ளார்.
மத்திய பிரதேஷ் மாநிலத்தின் மதுராவை சேர்ந்தவர் பூல்வாட்டி(7௦). 1982ம் ஆண்டு, அவருடைய கணவர் மற்றும் மகளின் இறப்பிற்கு பிறகு மதுராவிற்கு குடிபெயர்ந்தார். அங்கு வந்த பிறகு, அங்குள்ள பாங்கே பிஹாரி கோவிலில் உள்ள இரண்டாம் வாயிலில் பக்தர்கள் தங்கள் காலணிகளை கழற்றி பாதுகாக்க வைக்கும் கட்டணத்தை வசூல் செய்தார்.
இவ்வாறு அவர் சேர்த்த சேமிப்பும், தனது சொத்துக்களை விற்று சேர்த்த ரூ 40 லட்சத்தை விரிந்தாவனில் மாட்டுக்கொட்டகை மற்றும் புண்ணியஸ்தலம் கட்டவும், மதுராவில் பாங்க் பிஹாரி கோவிலில், கிருஷ்ண பகவானுக்கு மரியாதை செலுத்தும் வகையில் சடங்குகள் நடத்தவும் கொடுத்துள்ளார்.
மேலும் நன்கொடைகள் மூலம் பணம் பெற்று, மதுராவிலுள்ள பர்சனா என்னும் இடத்தில் மற்றொரு மாட்டுக்கொட்டகையை கட்ட திட்டமிட்டுள்ளார்.
“கிருஷ்ணரை கௌரவிக்க சிறந்த வழிபாடு மாட்டுக்கொட்டகை தான். அதனால் தான், மாட்டுக்கொட்டகை ஒன்றை நான் கட்ட விரும்புகிறேன். எனக்கு கிருஷ்ண பகவானிடம் நல்ல உறவுண்டு. அதனால் தான் என்னிடம் இருக்கும் அனைத்தையும் அவருக்காக கொடுக்கிறேன். எனக்கு ஒரு மகன் உள்ளான். அவனை சில நேரங்களில் சென்று சந்திப்பேன். ஆனால், அவனுடன் வாழ எனக்கு விருப்பமில்லை.
நான் நீண்ட நாள் வாழ்ந்தால், பர்சானவிலும் மாட்டுக்கொட்டகை ஒன்றை அமைப்பேன். நான் செய்யும் நல்ல காரியங்களை வேறுயாருக்கும் வெளிப்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. கிருஷ்ண பகவானுக்கு சேவை செய்து, என் வாழ்நாள் முழுவதும் சமாதானமாக செலவழிக்க விரும்புகிறேன்.
கடந்த 2௦ ஆண்டுகளாக அவருடன் வசிக்கும் புஷ்பா தேவி கூறுகையில்,
“தன்னிடமிருந்த அனைத்தையும் அம்மாஜி கொடுத்துவிட்டார். நன்கொடை மூலம் அவருக்கு கிடைக்கும் பணத்தை, பண உதவி தேவைப்பட்டோருக்கோ அல்லது கோவிலில் நடக்கும் சடங்குகளுக்கோ தாராளமாக கொடுத்துவிடுவார். ஏழை மக்களுக்கு அன்னதானம் தயாரித்து, உணவு வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். அம்மாஜி எவ்வளவு தாழ்மையானவர் என்றும், அவருடைய செயல்களை குறித்து பேசுவதை வெறுப்பவர் என்று அங்குள்ள அனைவருக்கும் நன்றாக தெரியும்” என்று தெரிவித்தார்.