May 29, 2017 தண்டோரா குழு
மகளிர் திட்டத்தின் சார்பில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் பெண்களின் வாழ்வாதாரத்ததை உயர்த்திய தமிழக அரசுக்கு கோவை மாவட்ட பெண்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
மகளிர் திட்டத்தின் மூலம் புதிய சுயஉதவிக்கழு அமைத்தல், வங்கிக்கடன், வேலைவாய்ப்பு முகாம், இளைஞர்களுக்கான தொழிற்திறன் பயிற்சி, மகளிர் தொழில் முனைவோர் பயிற்சி, ஊராட்சி அளவிலான குழுக்கூட்டமைப்புகளுக்கு ஊக்கத் தொகை ரூ.1 லட்சம் வழங்குதல், மகளிரை குடும்பத்தலைவியாக கொண்ட குடும்பங்களுக்கான சிறப்பு வாழ்வாதார பயிற்சி போன்றவை செயல்பட்டு வருகின்றன.
கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் (மகளிர் திட்டம்) சார்பில் 6698 சுயஉதவி குழுக்களுக்கு ரூ.211.34 கோடி நிதி கடந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ளது. இதனால் 5753 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் 2011 முதல் 2017-ம் ஆண்டு வரை 18 வயது முதல் 60 வயது வரையுள்ள மகளிர் சுயஉதவிக்குழுவில் சுமார் 3,06,217 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் ரு.375.18 கோடி தொகையினை சேமிப்பாக வைத்துள்ளனர்.
அதே போல் 2,053 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு சுழல் நிதிக்கடனாக ரூ.2.39 கோடி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 34,581 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.755.52 கோடி வங்கிகளின் மூலம் நேரடிக்கடன் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து சுமதி என்ற பெண் கூறுகையில்
” எனக்கு திருமணமாகி மூன்று பெண் குழந்ததைகள் உள்ளன. எனது கணவர் தையல் கடை வைத்துள்ளார். நான் ஆரோக்கிய அன்னை மகளிர் சுயஉதவிக்குழுவில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றேன்.
மகளிர் சுய உதவிக்குழுவில் சுய தொழில் தொடங்க 10 ஆயிரம் கடனுதவி பெற்று சிறு கைப்பை கடை வைத்துள்ளேன். அதுமட்டுமல்லாமல் எனக்கு தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் பசு மாடு வழங்கப்பட்டது. அந்த பசு மாடு ஒரு பெண் கன்று ஈன்றது. அந்த பசு தற்போது காலை 3 லிட்டர் பாலும், மாலை 2 லிட்டர் பாலும் தருகிறது. இதன் மூலம் மாதம் 3 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இவ்வருமானத்தின் மூலம் எனது குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள்ள முடிகிறது.” என்றார்.
இது குறித்து சந்திரா என்பவர் கூறுகையில்
” எனது கணவர் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். எனக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். எனது குடும்பத்தை நடத்துவதற்கு சிரமமப்பட்டு வந்த நிலையில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் கயிர் திரிக்கும் பணி சுய தொழில் மேற்கொண்டு வருகிறேன். இதன் மூலம் மாதத்திற்கு ரூ.15,000 வரை வருமானம் கிடைக்கிறது. இத்திட்டத்தின் மூலம் எனது குழந்தைகளின் படிப்பு செலவிற்கும் போதுமானதாக உள்ளது. இத்திட்டத்தை வழங்கிய தமிழக அரசிற்கு குடும்பத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.” என்றார்.