May 31, 2017 தண்டோரா குழு
பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் தாசரி நாரயணராவ் உடல் நலக்குறைவால் காலமானார்.
இந்தியாவில் அதிக படங்களை இயக்கியவர் என்ற பெருமையைப் பெற்ற தாசரி நாராயணராவ் தெலுங்கில் 150-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியும், 50-க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்தும் உள்ளார்.250 படங்களில் வசனகர்த்தாவகவும் பணியாற்றியுள் அவர்,தமிழ்,தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.
இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுவாசப் பிரச்சனை மற்றும் சிறுநீரகப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் தாசரி நாராயணராவின் உடல்நிலை திடீரென மோசமடைந்தது. மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை ‘அம்மா’ எனும் பெயரில் திரைப்படமாக எடுக்க இருப்பதாக தாசரி நாராயண ராவ் அண்மையில் அறிவித்திருந்தார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்த தாசரிநாராயணராவ், முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் நிலக்கரித் துறை இணை அமைச்சராக பொறுப்பு வகித்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது.