June 1, 2017 தண்டோரா குழு
திருவனந்தபுரத்தை சேர்ந்த திருநங்கை சாரா ஷீகா MNC நிறுவனத்தில் மனித வள பிரிவு நிர்வாகியாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கேரளா மாநிலத்தின் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் சாரா ஷீகா. இவர் ஒரு தாவரவியல் பட்டதாரி. திருநங்கையான இவர் கேரளாவில் டெக்னோ பார்க்கில் உள்ள யூஎஸ்டி நிறுவனத்தில் மனித வள பிரிவு நிர்வாகியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றும் முதல் திருநங்கை என்ற பெருமை சாரா ஷீகாவுக்கு கிடைத்துள்ளது.
இது குறித்து சாரா ஷீகா கூறுகையில்,
“மனித வள பிரிவில் எனக்கு நாலரை ஆண்டு அனுபவம் உண்டு. இத்தனை ஆண்டுகள் என்னுடைய அடையாத்தை மறைத்து, ஆணாகவே வாழ்ந்தேன். அபுதாபியில் பணிபுரிந்தபோது, பல இன்னல்களை அனுபவித்தேன். ஒரு பெண்ணாக வாழ விரும்பினேன். யூஎஸ்டி நிறுவனம் என்னை ஏற்றுக்கொண்டதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். திருநங்கை மக்களிடையே பணிபுரிந்து வந்த மனித வள அதிகாரி ஸ்மிதா, என்னுடைய சுயவிவர விண்ணப்பத்தை வாங்கிக்கொண்டு, எனக்கு வேலை கிடைக்க உதவினார்.
என்னுடன் பணியாற்றும் ஊழியர்கள் எனது அடையாளத்தை ஏற்றுக்கொண்டனர். என்னுடைய தலைமையின் கீழ் 65 பேர் கொண்ட குழு உள்ளது. அனைவரும் எனக்கு ஆதரவாக உள்ளனர். திருநங்கைகளுக்கு வீடு கிடைப்பது கடினமான ஒன்று. என்னுடைய நிறுவனமே நான் தங்குவதருக்கு ஒரு இடத்தை தந்துள்ளது.
என்னுடைய குடும்பம் என்னுடைய அடையாளத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. என்னுடைய தங்கையின் வாழ்க்கை குறித்தோ அவளுடைய திருமணத்திற்கு தடையாக இருக்க விரும்பவில்லை. என்னுடைய சொந்த காலில் நிற்பது தான் எனக்கு முக்கியமானது” என்று தெரிவித்தார்.