June 1, 2017 தண்டோரா குழு
நாடு முழுவதும் சந்தைகளில் மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்யக் கூடாது என மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விவகாரம் தற்போது நாடு முழுவதும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
மத்திய அரசுக்கு எதிராக பல இடங்களிலும் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றன. கேரளா, கர்நாடகா, மேற்கு வங்கம் என பல மாநில அரசுகளும் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் ‘மாட்டிறைச்சித் திருவிழாக்களும்’ நடத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில்,
பா.ஜ.க, உங்களுக்கு அதிகாரம் இருக்கிறது. இந்தியாவை முன்னேற்றுங்கள். மக்களின் தனிப்பட்ட விருப்பங்களில் தலையிடாதீர்கள். இந்த இந்து தேசப் பரப்புரையை நிறுத்துங்கள். நாம் அதைவிட மேலானவர்கள். கால்நடைகள் கொல்வது பற்றியான விஷயம் தேவையற்றது. அது மக்களை மூர்க்கமடையத்தான் செய்கிறது. மாநில அரசு இந்த முடிவுக்கு இசைந்து கொடுத்தாலும் இல்லையென்றாலும், மத்திய அரசு இதிலிருந்து விலகியே இருக்க வேண்டும். நம்மில் பலர் ‘பக்தாஸ்’ அல்ல. நாம் வெறும் இந்தியர்கள். வாழு, வாழவிடு. வெறுப்பை நிறுத்துங்கள்’என்று கூறியுள்ளார்.