June 1, 2017 தண்டோரா குழு
சென்னை சில்க்ஸ் கடையில் தீ விபத்து ஏற்பட்டு கடுமையாக சேதமடைந்துள்ளதால் சம்பளம் வருமா என ஊழியர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
சென்னை தி நகரில் உள்ள சென்னை சில்க்ஸில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது.நேற்று எரிய தொடங்கிய தீ இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தீயணைப்பு வீரர்களும் தீயை அணைக்கப் போராடி வருகின்றனர். இதற்கிடையில் கட்டிடத்தின் முன் பகுதி வெப்பத்தால் இடிந்து விழுந்தது. இதையடுத்து, விதி மீறி கட்டப்பட்ட இக்கட்டிடம் 3 நாளில் முழுவதுமாக இடிக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை சில்க்ஸில் நெல்லை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான ஆண்கள், பெண்கள் வேலை பார்த்து வருகின்றனர். கடையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழக்கமாக 1-ம் தேதி சம்பளம் வழங்கப்படும்.அதாவது இன்று அவர்களுக்கு சம்பள நாள். தீ விபத்து சம்பவத்தால் சம்பளம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது தீ விபத்து ஏற்பட்டு கட்டடம் முழுவதும் எரிந்துள்ளதால் அவர்களது வேலை கேள்விக்குறியாகி உள்ளது. இதுமட்டுமின்றி இம்மாதம் சம்பளமும் கேள்விக்குறியாகி உள்ளதால் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.
இந்த மாதம் சம்பளத்தை வாங்கிதான் ஸ்கூலுக்கு பீஸ் கட்ட நினைத்தோம். ஆனால் இப்படி ஆகிவிட்டது. என்ன செய்வதென்று தெரியவில்லையே என பெண் ஊழியர்கள் சிலர் கண்ணீர் மல்க அழுதது மிகவும் பரிதாபமான சூழ்லை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், சென்னை சில்க்ஸ் நிர்வாகமும் இதுவரை ஊழியர்களுக்கு சம்பளம் குறித்து எந்தவித உத்தரவாதமும் அளிக்காததால் சம்பளம் மேலும் தாமதமாகலாம் என கூறப்படுகிறது.