June 2, 2017 தண்டோரா குழு
திருப்பத்தூரில் மணமேடையில் கெட்டி மேளம் கொட்டிய கடைசி நேரத்தில் மணமகனை தள்ளிவிட்டு அவரது தம்பி மணமகளின் கழுத்தில் தாலி கட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் செல்லரைப்பட்டியை சேர்ந்தவர் காமராஜ். இவரது மகன்கள் ரஞ்சித், ராஜேஷ், வினோத். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ராஜேஷுக்கு, விருதுநகர் மாவட்டம்,ராஜபாளையத்தை சேர்ந்த காளீஸ்வரி என்பவரை திருமணம் செய்ய நிச்சயம் செய்தனர். இதையடுத்து கோயிலில் நேற்று அவர்களுக்கு காலை திருமணம் நடக்க இருந்தது. இதற்காக நேற்று முன்தினம் இரவு மணப்பெண் அழைப்பு மற்றும் நலுங்கு சடங்குகள் நடந்தன.
திருமணத்திற்காக நேற்று அதிகாலை அனைவரும் கோயிலுக்கு வந்தனர். காலை 7.30 மணிக்கு மணமேடையில் மணமக்கள் அமர்ந்ததும், திருமண சடங்குகள் தொடங்கியது. ஐயர் பூஜை செய்த தாலியை பெரியோர்களிடம் ஆசி வாங்கி வரச்செய்து கெட்டி மேளம் கொட்ட தாலியை மணமகனிடம் கொடுத்தார்.
அப்போது , ராஜேஷ் தாலி கட்ட தயாரான போது அருகில் நின்றிருந்த தம்பி வினோத், அண்ணன் ராஜேஷை திடீரென தள்ளிவிட்டு தான் மறைத்து வைத்திருந்த வேறு ஒரு தாலியை எடுத்து மணமகளின் கழுத்தில் அவசர, அவசரமாக கட்டினார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உட்பட அனைவரும் வினோத்தை சரமாரியாக அடித்து உதைத்தனர்.ஆனால், ஒன்றும் நடக்காததுபோல் சிரித்ததார். எனினும் மணமகள் அமைதியாகவே இருந்தார்.இதனால், சந்தேகமடைந்து மணமகளிடம் விசாரித்தபோது இருவரும் காதலிப்பது தெரியவந்தது.
ராஜேசுக்கு பெண் பார்க்க சென்ற போது, மணமகள் வினோத்தை பார்த்து சிரித்துள்ளார். அப்போதே அவர்களுக்குள் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது.இதை யாருக்கும் சொல்லாமல் மறைத்துவிட்டனர். இந்த விவரம் தெரிந்ததும் மணமகளையும் உறவினர்கள் சரமாரி அடித்து உதைத்தனர்.
இதையடுத்து புதுமண தம்பதியினர் பெண் வீடான ராஜபாளையம் புறப்பட்டு சென்றனர். இவர்களது திருமணத்துக்கு பெண் வீட்டார் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஆனால், தான் அவமானப் படுத்தப்பட்டதால் ஆத்திரமடைந்த ராஜேஷ், பட்டு சட்டை மற்றும் வேட்டியை கிழித்து வீசினார்.கையில் இருந்த மஞ்சள் கயிறையும் தூக்கி ஏறிந்து விட்டு கதறி அழுதபடி கோயிலை விட்டு வெளியேறினார்.
சினிமாவில் வருவதுபோல நடந்த இந்த திடீர் மணமகன் மாற்றத்தால் யாரும் விருந்து சாப்பிடாமல் கோயிலிலை விட்டு வெளியேறினர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.