June 2, 2017 தண்டோரா குழு
கோவை போத்தனூர் பகுதியில்,ஊருக்குள் புகுந்த காட்டு யானை தாக்கி 4 பேர் பலி மற்றும் 3 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதி பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை போத்தனூர் அருகே உள்ள கணேசபுரம் பகுதியில் இன்று அதிகாலை 3 மணி அளவில் காட்டு யானை ஒன்று ஊருக்குள் புகுந்து வீட்டின் வாசலில் தந்தையுடன் தூங்கி கொண்டு இருந்த காயத்திரி என்ற 11 வயது சிறுமியை தாக்கியது. பின்னர் அந்த சிறுமியை துதி கையால் தூக்கி எரிந்தும், மிதித்தும் கொன்றது, சத்தம் கேட்டு தந்தை விஜயகுமார் தடுக்க முயன்ற போது அவரையும் யானை தாக்கியது. இதில் படுகாயமடைந்த விஜயகுமார் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இதையடுத்து சிறுமி காயத்திரியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.
இதனைத்தொடர்ந்து போத்தனூர் பகுதியில் சிறுமியை கொன்ற காட்டு யானை போத்தனூர் அடுத்த வெள்ளலூர் பகுதியில் நகர்ந்து வந்துள்ளது. அப்போது அதிகாலை 5 மணி அளவில் நடை பயிற்சியில் மேற்கொண்டிருந்த நாகரத்தினம் மற்றும் ஜோதி மணி என்ற வயதான இரண்டு பெண்களையும் தாக்கியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த அவர்களை பொது மக்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கோவை அரசு மருத்துவமனையில் ஒருவருக்கு பின் ஒருவராக இருவரும் உயிரிழந்தனர். தற்போது 3 பேர் உடல் பிரேத பரிசோதனைகக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப் பட்டுள்ளது.
மேலும் , இந்த காட்டு யானை வனப்பகுதியிக்குள் சென்ற 60 வயது மதிக்கத்தக்க பழனிச்சாமி என்ற முதியவரையும் தாக்கியுள்ளது.அவர் சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்தார்.
ஒரே நாளில் காட்டு யானை தாக்கியதில் 4 பேர் உயிரிழந்துள்ள இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத்தொடர்ந்து தற்போது வெள்ளலூர் பகுதியில் முகாமிட்டுள்ள அந்த காட்டு யானையை காட்டுக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என நகராட்சி நிர்வாகத்தால் எச்சரிச்சை செய்யப்பட்டுள்ளது.
மேலும், நேற்று முன்தினம் இந்த ஒற்றை காட்டு யானையை வனப் பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த வனத்துறை ஊழியர்களை 2 பேரை தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த கார்த்திக், விஜய் என்ற வன ஊழியர்கள் இரண்டு பேரும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று முன்தினம் வன ஊழியர்களை தாக்கிய பின்னர் வனத்துறையினர் துரித நடவடிக்கை எடுத்து இருந்தால் இன்று இதுபோன்ற சம்பவம் தவிர்க்கப்பட்டு இருக்கும் எனவும் அப்பகுதியில் பாதுகாப்புயின்றி வாழ்வாதாகவும், தகவல் தெரிவித்தும் அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.
மேலும் வனத்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் பாதுகாப்பிற்கு உறுதி அளிக்க வேண்டும் அதுவரை மருத்துவமனையில் இருக்கும் உடல்களை வாங்க மாட்டோம் என அவர்கள் எச்சரித்தனர்.