June 3, 2017 தண்டோரா குழு
ஆக்ராவில், 18 முறை கருக்கலைந்த நிலையில், 19வது முறையாக, அழகிய ஆண் குழந்தை ஒன்றை, தனது 38வது வயதில் பெண் ஒருவர் பெற்றெடுத்துள்ளார்.
உத்தரபிரதேஷ் மாகாணத்திலுள்ள ஆக்ராவின் பர்ஹான் பகுதியிலுள்ள ஹதிகர்ஹி கிராமத்தில் ரஜானி (38). இவருக்கு, 18 வயதில் திருமணம் நடந்தது.ஒவ்வொரு முறையும் அவர் கர்ப்பம் அடையும்போது, ஐந்தாவது அல்லது ஆறாவது மாதத்தில் அவருக்கு கருசிதைவு ஏற்பட்டு விடும். அவருக்கு சுமார் 18 முறை கருசிதைவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, ரஜானி மற்றும் அவருடைய கணவர் மருத்துவ உதவியை நாடியுள்ளனர். தனியார் மருத்துவமனையின் லேப்ரோஸ்கோப்பி நிபுணர் டாக்டர் அமித் டாண்டன் மற்றும் குழந்தையின்மை நிபுணர் டாக்டர் வைஷாலி ரஜானியை பரிசோதனை செய்தனர். பரிசோதனையின் முடிவில், கருப்பையின் வாயில் மிகவும் பலவீனமாக இருந்தபடியால், குழந்தையை தாங்கமுடியாமல் கருசிதைவு ஏற்பட்டுள்ளது என்று கண்டுபிடித்தனர்.
கருப்பையில் லேப்ரோஸ்கோபி தையல் போட்டால் மறுபடியும் கருசிதைவு ஏற்படாது என்று முடிவு செய்தனர். ரஜானி மீண்டும் கருவுற்றபோது, அவருடைய மூன்றாம் மாதத்தில் மருத்துவர்கள் லேப்ரோஸ்கோபி தையல் போட்டனர். இதனால், ரஜனிக்கு மீண்டும் கருசிதைவு ஏற்படாமல் இருந்தது. சமீபத்தில் அவருக்கு ஒரு அழகான ஆண் குழந்தையை பிறந்துள்ளது.
இந்த சம்பவம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறக்கூடும் என மருத்துவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். ரஜானி குடும்பத்தினர் மிக உற்சாகமாகக் காணப்படுகின்றனர்.