June 5, 2017 தண்டோரா குழு
அயர்லாந்தின் ஆளும் கட்சித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த மருத்துவர் லியோ வரத்கர் அயர்லாந்தின் பிரதமராக பொறுப்பேற்கவுள்ளார்.
லியோ வரத்கர், பைன் கேயல் கட்சியை சேர்ந்தவர். இவர் இம்மாதத்தின் இறுதிக்குள் அயர்லாந்தின் அடுத்த பிரதமர் பதவியை ஏற்கவுள்ளார். அந்நாட்டின் இளம் பிரதமர் என்ற பெருமையும் அவருக்கு கிடைக்கிறது.
அயர்லாந்தின் பிரதமராக இருந்த என்டா கென்னி தனது பதவியை 2௦17-ம் ஆண்டின் தொடக்கத்தில் ராஜினாமா செய்தார். இதையடுத்து, கட்சியின் மூத்த தலைவர்கள் அளித்த ஆதரவால், 6௦ சதவீத வாக்குகள் பெற்று, உள்துறை அமைச்சருக்கு எதிராக வெற்றிப்பெற்று கட்சியின் 11வது தலைவராக லியோ தேர்ந்தெடுக்கபட்டார்.
மும்பை நகரை சேர்ந்த அசோக் வரத்கருக்கும், அயர்லாந்தை சேர்ந்த மிரியம் என்பவருக்கும் மகனாக பிறந்தவர் லியோ. அரசியலில் சேருவதற்கு முன் மருத்துவராக பணியாற்றிக்கொண்டிருந்தார். 2௦15-ம் ஆண்டு தான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்று வெளிப்படையாக தெரிவித்தார். முதலில் அதிர்ச்சி அடைந்த அவருடைய குடும்பத்தினர், பிறகு தங்களுடைய ஆதரவை தெரிவித்துள்ளனர்.
2௦15-ம் ஆண்டு, ஐயர்லாந்து நாடு ஓரின திருமணங்களுக்கு அனுமதி அளித்தது. கருகலைப்பு குறித்து கடுமையான சட்டங்களை ஐரோப்பிய நாடுகள் கொண்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.