June 5, 2017 தண்டோரா குழு
17 ஆதி திராவிடர் மாணவ மாணவியர்க்கு அரசு கட்டணத்தில் சிறந்த பள்ளிகளில் பயில பள்ளிச்சேர்க்கைக்கான உத்தரவினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் வழங்கினார்.
கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் பட்டாமாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரனிடம் அளித்தனர்.
பொதுமக்களிடம் இருந்து 287 மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
அதன் பின்னர் ஆதி திராவிட நலத்துறையின் மூலமாக 17 ஆதி திராவிடர் மாணவ மாணவியர்க்கு அரசு கட்டணத்தில் சிறந்த பள்ளிகளில் பயில பள்ளிச்சேர்க்கைக்கான உத்தரவினை 7 மாணவ மாணவியருக்கு 7-ஆம் வகுப்பு பயிலுவதற்கும், 10 மாணவ மாணவியருக்கு 12- ஆம் வகுப்பு பயிலுவதற்கும், மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் வழங்கினார்.
மேலும் இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சென்னியப்பன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலர் சுரேஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணமூர்த்தி, முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, ஆதி திராவிட நல அலுவலர் மோகன், உட்பட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.