June 5, 2017 தண்டோரா குழு
ஜெய்பூரில் குதிரை ஒன்று வெயிலின் தாக்கம் காரணமாக காரின் முன் கண்ணாடியை உடைத்து உள்ளே குதித்தது. காருக்குள் விழுந்த குதிரை வெளி வர முடியாமல் சிக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் நகரில் குதிரை ஒன்று கட்டுகளை அவிழ்த்து சாலையில் வேகமாக ஓடியுள்ளது. கட்டுப்பாட்டை இழந்த அந்த குதிரை, எதிரில் வந்த காரின் மீது மோதி, காரின் முன் கண்ணாடியை உடைத்து, காரின் உள்ளே குதித்து விழுந்து. அதிலிருந்து வெளிவர முடியாமல், சிக்கிக்கொண்டது. காரை ஒட்டி வந்த பங்கஜ் ஜோஷி என்பவரும் குதிரையும் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பொது மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அவர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பொது மக்கள் உதவியுடன், காரில் சிக்கியிருந்த குதிரையை மெதுவாக வெளியேற்றினர். காயமடைந்திருந்த குதிரைக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர்.
“இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 4) மதியம் நடந்துள்ளது. ஜெய்ப்பூரில் வெயிலின் தாக்கம் 42 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததை குதிரையால் தாங்கிக்கொள்ள முடியாவில்லை. இதனால் வேகமாக ஓடி காரின் முன் கண்ணாடியை உடைத்துக்கொண்டு விழுந்ததில், காரில் சிக்கிக்கொண்டது” என்று ஜெய்பூர் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
“ஜெய்பூர் சிவில் சாலையில் காரை நிறுத்தி வைத்திருந்தேன். வீடு திரும்புவதற்காக காரை ஸ்டார்ட் செய்த சில நிமிடகளில் முன் கண்ணாடி உடையும் சத்தம் கேட்டது. மறு நிமிடம், குதிரை ஒன்று என் அருகில் இருப்பதை கண்டேன். என் கைகளில் சிறிதாக காயம் ஏற்பட்டது. மெதுவாக காரை விட்டு வெளியே வந்தேன்.” என்று பங்கஜ் ஜோஷி கூறினார்.