May 10, 2016 தண்டோரா குழு
இந்தியன் ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் (IRCTC) வலைத் தளத்திலிருந்து எந்தத் தகவல்களும் திருடப்படவில்லை என்று சென்டிரல் ரயில்வே, வெஸ்டன் ரயில்வே உயர்மட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய அளவில் IRCTC வலைத் தளத்தை தினமும் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் தங்களது ரயில் பயணத்திற்கு முன் பதிவு செய்யவும், மற்றும் பல பரிவர்த்தனைகளுக்கும் உபயோகிக்கிறார்கள்.
அக்காரணத்திற்காக தங்களுடைய கிரெடிட் கார்டு, டெபிட் கார்ட், மொபைல் நம்பர், லாகின் ஐ.டி, மற்றும் பாஸ்வேர்ட், போன்ற நுட்பமான தகவல்களை இந்த வலைத்தளத்தில் பதிவு செய்கிறார்கள்.
இந்தத் தகவல்கள் திருடப்பட்டு, C.D யில் பதிவு செய்யப்பட்டு 15 ஆயிரம் ரூபாய் வரையில் தேவைப்பட்டோர்க்கு விற்கப்படுகின்றன என்று மும்பை போலீசாருக்கு புகார்கள் வந்தன.
இதனால் பலரின் உயிருக்குக் கூட அபாயம் ஏற்படலாம் என்றும் புகாரில் கூறப்பட்டிருந்தது. சென்டிரல் ரயில்வே, வெஸ்டேன் ரயில்வே, அதிகாரிகள் இந்தத் தகவல்களை மறுத்துள்ளனர்.
இந்த IRCTC வலைத்தளத்தின் எந்தச் சேவை மையத்திலிருந்தும் எந்தத் தகவல்களும் திருடப்படவில்லை என்றும் அவை மிகவும் பாதுகாப்பாக உள்ளது என்றும் கூறியுள்ளனர்.
சென்டிரல் ரயில்வே பொதுமேலாளர் எஸ்.கே,சூட் கூறுகையில் தங்களது முதற்கட்ட விசாரணையின் படி வலைத்தளத்திற்குள் எந்த வெளி ஊடுருவல்களும் தென் படவில்லை என்றும் அனைத்தும் பத்திரமாக இருக்கின்றன என்றும் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி விசாரணைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதாகவும் கூறினார். இதுவரை இந்தத் தகவல் கசிவு தொடர்பாக எந்தப் புகாரும் டெல்லியிலோ, மும்பையிலோ பதிவு செய்யப்படவில்லை என்று மேற்குப் பகுதி பொது மேலாளர் அரவிந்த் மால்கிடே அறிவித்துள்ளார். எனினும் தாங்கள் பாதுகாப்பு முறைகளைப் பலப்படுத்தியும், அடிக்கடி கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
மஹாராஷ்டிரா சைபர் செல் அதிகாரிகளின் கேள்விகளுக்கு மேற்கு ரயில்வே பிரதிநிதி ரவீந்திர பாகர் பதிலளிக்கையில் வாடிக்கையாளர்களின் நுட்பமான தகவல்கள் எதுவும் திருடப்படவில்லை என்றும், இதுவரை அந்த விதமான புகார்கள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மற்றும் வாடிக்கையாளர்கள் அடிக்கடி தங்களுடைய பாஸ் வேர்ட் ஐ மாற்றிக் கொள்ளுமாறும் பணித்துள்ளார்.