June 6, 2017 தண்டோரா குழு
ஆர்.கே. நகரில் நேர்மையாக தேர்தல் நடத்த முடியும் என்ற சூழ்நிலை உருவான பிறகே அங்கு இடைத்தேர்தல் நடத்த முடியும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
” பணம் பட்டுவாடா பிரச்னையால் கடந்த ஏப்ரல் மாதம் 9-ம் தேதி ஆர்.கே. நகரில் இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
அதன் படி ஜூன் 4-ம் தேதிக்குள் ஆர்.கே.நகரில் தேர்தல் நடத்த வேண்டும். ஆனால், இன்று வரை அங்கு நிலைமை சரியில்லாத காரணத்தினால் நேர்மையான தேர்தல் அங்கு நடத்த தற்போது வாய்ப்பு இல்லை.
இது குறித்து மத்திய சட்ட அமைச்சகத்துடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது. ஆர்.கே. நகரில் நேர்மையாக தேர்தல் நடத்த முடியும் என்ற சூழ்நிலை உருவான பிறகே அங்கு இடைத்தேர்தல் நடத்த முடியும் என்ற முடிவை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது.” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.