June 6, 2017 தண்டோரா குழு
இரண்டு வருடங்களுக்கு முன் மூக்கு இல்லாமல் பிறந்த ஆண் குழந்தை தற்போது இறந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள அலபாமா நகரில் கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு குழந்தை பிறந்தது. அக்குழந்தையை பார்த்த பெற்றோர் மட்டுமின்றி அனைவரும் ஆச்சரியமடைந்தனர். ஏனெனில், குறைமாதக் குழந்தையாக, மூக்கிற்குள் துளைகள் இல்லாமல், சைனஸ் துவாரங்கள் இல்லாமல் அக்குழந்தை பிறந்துள்ளது.197 மில்லியன் பிறப்புகளில் ஒருவருக்கு இந்த பாதிப்பு வருமாம். குழந்தையின் வருகையை எதிர்பார்த்து சந்தோஷமாக இருந்த பெற்றோர்க்கு குறைபாடுடன் குழந்தை பிறந்தாலும் ஏலி தாம்சன் என அக்குழந்தைக்கு பெயர் சூட்டி பாசத்துடன் வளர்த்து வந்தனர்.
பிறந்த 5வது நாளில் ஏலிக்கு டிரைக்யோடோமி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தக் குழந்தை சுவாசித்து வந்தது.கடந்த மார்ச் மாதம் இந்தக் குழந்தை தனது மூன்றாம் ஆண்டில் காலடி எடுத்து வைத்துபிறந்த நாளை கொண்டாடியது. இந்த நிலையில் இந்தக் குழந்தை இறந்துள்ளது.
இதுகுறித்து அக்குழந்தையின் தந்தை ஜெரிமி பிஞ்ச் தனது பேஸ்புக்கில்,
”நாங்கள் முந்தைய நாள் இரவில் எங்களது அருமையான குழந்தையை இழந்தோம். இது ஏன் எங்களுக்கு ஏற்பட்டது என்றே தெரியவில்லை. எங்களுக்கு இந்த சம்பவம் நீண்ட நாட்களுக்கு மன அழுத்தத்தைக் கொடுக்கும். அழகான மகனை இழந்துவிட்டோம். சிறிது நாட்களில் பலரையும் ஈர்த்து விட்டான். அவனை அதிகம் பேர் கவனித்துக் கொண்டனர். அப்படியொரு மகன் கொடுக்க நான் கொடுத்து வைத்தவன்” என்று பதிவிட்டுள்ளார்.
இவரது பதிவு பலருக்கும் அனுதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.