June 6, 2017 தண்டோரா குழு
கோடநாடு காவலாளி கொலை வழக்கில் கைதான சயனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் கடந்த ஏப்ரல் மாதம் 24ம் தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டு கொள்ளை சம்பவம் நடந்தது. இதுகுறித்துகாவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் 11 பேர் கொண்ட கும்பல் இச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.இதனிடையே முக்கிய குற்றவாளியான கனகராஜ் ஆத்தூர் அருகே ஏப்ரல் 29 ஆம் தேதி இரவு அன்று விபத்தில் உயிரிழந்தார்.
இதற்கு அடுத்தநாள் அதிகாலையில் கனகராஜின் நெருங்கிய நண்பரும்,இவ்வழக்கில் மற்றொரு முக்கிய குற்றவாளியுமான சயான் திருச்சூர்பைபாஸ் சாலையில் கண்ணாடி என்கிற இடத்தில் கார் விபத்தில் படுகாயமடைந்தார்.
இதில் இவரது மனைவி மற்றும் குழந்தை விபத்தில் பலியாயினர். படுகாயம் அடைந்த நிலையில் சயன் பாலக்காடு அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் மேல் சிகிச்சைக்காக கேரள போலீசார் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த மேமாதம் 17ம்தேதி நள்ளிரவில் தனியார் மருத்துவமனையில் இருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் இருந்து சயானை குன்னூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பலத்த பாதுகாப்புடன் போலீசார் இன்று அழைத்து சென்றனர்.
இதையடுத்து, கோத்தகிரி குற்றவியல் நீதிமன்றம் சயனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் அளித்து உத்தரவிட்டுள்ளது.