June 7, 2017 தண்டோரா குழு
கோவை உக்கடம் மஜீத் காலனி பகுதியில் இன்று பிற்பகலில் மழை பெய்யும் போது வீட்டின் முன்னர் இருந்த துணி எடுக்க சென்ற பானு என்ற 16 வயது பெண்ணும் அவரது அண்ணனும் மின்சாரம் தாக்கி பலியான சம்வவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை உக்கடம் மஜீத் காலனி பகுதியை சேர்ந்தவர் சுலைமான்- பாத்திமா தம்பதியினர். இவர்களுக்கு 3 மகன்கள் மற்றும் ஓரு மகள் இருக்கின்றனர். இன்று பிற்பகல் கோவை நகரின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அப்போது வீட்டின் முன்பு இருந்த துணிகளை எடுக்க மகள் பானு( 16) சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த போஸ்ட் கம்பத்தை பிடித்த போது அதில் பாய்ந்த மின்சாரம் பானு மீது பாய்ந்தது. அவர் அலறி துடிக்கவே வீட்டில் இருந்த பானுவின் அண்ணன் சல்மான் அவரை பிடித்து இழுத்துள்ளார்.அப்போது அவரும் மின்சாரத்தில் சிக்கியுள்ளார்.
இருவரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதனையடுத்து சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் இருவரின் உடலை எடுத்துக்கொண்டு கோவை அரசு மருத்துவமனைக்கு விரைந்தனர். கோவை அரசு மருத்துவமனையில் இருவரின் உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து இருவரின் உடல்கள் கோவை அரசு மருத்துவமனையில் பிரேதப்பரிசோதனைக்காக பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. மின்சாரம் தாக்கி அண்ணன் தங்கை பலியான சம்பவம் உக்கடம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மஜீத் காலனியில் மின்சார வயர்கள் பாதுகாப்பின்றி தொங்குவது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் மாநகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை எனவும், ஆஜாக்கிரதை காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டு இருவரும் உயிரிழந்து இருப்பதாக மஜீத் காலனி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.