May 10, 2016 தண்டோரா குழு
இந்தியாவில் அமில வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள் பலரும் உள்ளனர். காதல் விவகாரம், குடும்ப தகராறு, விரக்தியில் அமிலம் வீசுதல் எனப் பல பேர் இந்த அமில விச்சால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக இத்தாக்குதலுக்கு ஆளாவது பெண்கள் தான் அதிகம். இதனால் பல பேர் தங்கள் வாழ்க்கையையே இழந்துள்ளனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக முழுக்க முழுக்க அமில வீச்சால் பாதிக்கப்பட்ட 5 பெண்கள் இணைந்து ஆக்ராவில் ஒரு காபி ஷாப் துவங்கியுள்ளார்கள்.
டெல்லி தலைநகர் ஆக்ராவில் தாஜ்மாஹல் அருகில் “சீரோஸ்“ என்ற பெயரில் இவர்கள் துவங்கி நடத்திவரும் காபி ஷாப் தற்போது பிரபலம் அடைந்து வருகிறது. மொத்தம் இரண்டு தளங்கள் கொண்டதாகவும், பார்ப்பதற்கு கண்ணைக் கவரும் வகையில் பலவிதமான வண்ணங்களால் அலங்கரிக்கப் பட்டுள்ளது இந்தக் கடை.
இக்கடையின் முழு அலங்காரத்தையும் அமில வீச்சால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் தான் வடிவமைத்துள்ளார். அமில வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களும் டெல்லியைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனமான “சான்வீ“ அமைப்பும் இணைந்து தான் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.
ஆக்ராவிற்கு சுற்றுலா வருபவர்கள் கண்டிப்பாக இந்தக் கடைக்கு ஒரு முறையாவது வந்து செல்வார்கள். அதற்குக் காரணம் இங்கு இசைக்கப்படும் இசையும் கடையும் அலங்காரமும் தான்.
மேலும், கடை திறப்பதற்கு முன்பாக இரண்டு மாதங்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் எப்படி நடந்து கொள்வது என்பது பற்றி பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது.
தற்போது இங்குப் பணிபுரிந்து வரும் 1992ம் ஆண்டு அமில வீச்சால் முகம் பாதிக்கப்பட்ட நீது (22) என்பவர் கூறும் போது, இந்த காபிஷாப் நாங்கள் நடத்துவது எங்களுக்கு இரண்டாவது வாழ்க்கை கிடைத்திருப்பது போல் உள்ளது எனத் தெரிவித்தார்.
மேலும், ரூபா என்பவர் கூறும் போது, இக்கடையை நடத்த உள்ளூர் மக்களின் ஆதரவு எங்களுக்கு அதிகம் கிடைத்தது. மேலும், முன்பெல்லாம் அவர்கள் எங்களை வித்தியாசமாக தான் பார்த்தார்கள் ஆனால் நாங்கள் செய்யும் வேலையைப் பார்த்து தற்போது ஊக்கமளித்து வருகிறார்கள். இது எங்களுக்கு மேலும் நம்பிக்கையை ஊட்டுகிறது என்றார்.
ஸ்டாப் ஆசிட் அட்டாக் அமைப்பின் நிறுவனர் அலோக் தீக்சித் கூறும்போது, அமில வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்பதே எங்களது கனவு திட்டம். இவர்களால் தற்போது நடத்தப்படும் காபிஷாப் போலவே டெல்லி கான்பூர் மற்றும் நாட்டில் பல்வேறு இடங்களில் துவங்க முடிவு செய்துள்ளோம் என்றார்.
அமில வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள் இது போன்று காபி ஷாப் நடத்துவது இந்தியாவில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இவர்களைப் போல பாதித்தவர்களை வைத்துத் துணி நிறுவனம் ஒன்று தங்களின் துணி வகைகளை விளம்பரப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.