June 8, 2017 தண்டோரா குழு
தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை இல்லை, பிளாஸ்டிக் அரிசி விற்பனை குறித்து புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத் பகுதியில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாகவும் அந்த அரிசியை சிறுவர்கள் உருண்டை பிடித்து பந்து போல் வீசி விளையாடுவதாகவும் சமூக வலைதளங்களில் வீடியோ பரவி வருகின்றது.
இதனை அடுத்து நாடு முழுவதும் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. தமிழகத்திலும் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யபடுவதாக தகவல் வெளியானது. இதனை தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் மறுத்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் காமராஜ் கூறுகையில்,
” தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி என்ற பேச்சுக்கே இடமில்லை. தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படவில்லை. ரேஷன் கடையில் மலிவு விலையில் அரிசி விற்பனை செய்யப்படுவதால் கலப்படம் செய்ய வாய்ப்பில்லை. பிளாஸ்டிக் அரிசி விற்பனை குறித்து இதுவரை எந்த புகாரும் வரவில்லை. அவ்வாறு புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.