June 8, 2017 தண்டோரா குழு
அந்நிய செலாவணி மோசடி வழக்கில் அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மீது சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
தனியார் தொலைக்காட்சிக்கு பொருட்கள் வாங்கியதில் முறைகேடு தொடர்பாகவும், கோடநாடு எஸ்டேட் போலி நிறுவனங்கள் மூலம் வாங்கப்பட்டது தொடர்பாகவும் அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக கூறி சசிகலா, டிடிவி தினகரன்,பாஸ்கரன் உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை 1996-ம் ஆண்டு 7 வழக்குகளைப் பதிவு செய்துள்ளன.
இந்த வழக்குகளில் இருந்து விடுவிக்கக்கோரி சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில் 2015-ம் ஆண்டு சசிகலா மீதான ஒரு வழக்கிலிருந்தும், தினகரன் மீதான 2 வழக்குகளிலிருந்தும், பாஸ்கரன் மீதான ஒரு வழக்கிலிருந்தும் அவர்களை விடுவித்து எழுப்பூர் நிதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதில் சசிகலா, தினகரன் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை ரத்து செய்யப்பட்டது.
அதன்படி டிடிவி தினகரன் மீதான 2 வழக்கு விசாரணையும் எழும்பூர் பொருளாதார குற்றவியல் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதனிடையே இன்று ஆஜரான தினகரன் மீது கோடநாடு எஸ்டேட் பங்களாவை போலி நிறுவனங்கள் மூலம் வாங்க முயன்றதாக கூறி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.