June 8, 2017 தண்டோரா குழு
ஆந்திராவின் பிரகாசம் பகுதியில் மருத்துவர் ஒருவர் பழங்குடியின மக்களுக்காக குறைந்த செலவில் மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார்.
ஆந்திர மாநிலத்தின் குண்டூரின் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்தவர் டாக்டர் மன்னே ரவீந்திரா. குண்டூரிள்ள மருத்துவ கல்லூரியில் படித்த இவர், கடந்த 47 ஆண்டுகளாக மக்களுக்கு இலவச சிகிச்சை அளித்து வருகிறார். இந்த மருத்துவமனையில் அப்பகுதியை சுற்றியுள்ள ஏராளமான பழங்குடியின மக்கள் குறைந்த செலவில் மருத்துவ சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
மருத்துவமனையில் இடப்பற்றாக்குறை ஏற்படும் போது வெளியே உள்ள மரத்தடியில் கட்டில் போட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து டாக்டர் ரவீந்திரா கூறுகையில்,
செஞ்சு குக்கிராமங்களில் வசிக்கும் பழங்குடி மக்கள் ஊட்டச்சத்து குறைவு காரணத்தால் மலேரியா மற்றும் காசநோயால் அவதிப்படுகின்றனர். ஆனால் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக நீர்ச்சத்து குறைபாடு அவர்களுக்கு ஏற்படுகிறது. அதனால் மரத்தடியில் சலைன் பாட்டில்கள் தொங்கவிட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதாக மருத்துவர் ரவீந்திரா கூறுகிறார்.
மருத்துவமனையின் தாழ்வாரம் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் மக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். “மரத்தின் மக்கள்” என்று தங்களை அழைத்துக்கொள்ளும் செஞ்சு இன மக்களை மரத்தின் கீழ் படுக்க வைத்து சிகிச்சை தருகிறோம்.
மலைப்பாங்கான பகுதியிலிருந்து வரும் பழங்குடி மக்களுக்கு இருதய நோய் அரிதாக இருக்கிறது. சமவெளி பகுதியிலிருந்து வரும் மக்களுக்கு நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் காணப்படுகிறது. இதனால் அவர்களுக்கு மாரடைப்பும் ஏற்படுகிறது. மருத்துவமனைக்கு அருகிலுள்ள தனியார் கட்டடங்களில் அறை எடுத்து தங்கும் மக்கள் ஒரு மெத்தைக்கு 2௦ ரூபாய் வாடகை தருகின்றனர்” என்று கூறினார்.