June 9, 2017 தண்டோரா குழு
கோவை அருகே மதுக்கரை வனப்பகுதியில் 18 வயது மதிக்கத்தக்க ஆண் யானை உடல் நலக்குறைவினால் உயிரிழந்தது.
கோவை மாவட்டம் மதுக்கரை, தீத்திபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக 18 வயது மதிக்கத்தக்க ஒற்றை ஆண் காட்டு யானை சுற்றி திரிந்தது. இந்த யானை தீத்திபாளையத்தில் விளைநிலங்களை யானை சேதப்படுத்தியதுடன், 4 வளர்ப்பு மாடுகளை தாக்கியது.
இதையடுத்து, வனத்துறையினர் யானை கிராமப்பகுதிக்குள் நுழைவதை தடுக்க கும்கியானை பாரியை நிறுத்தி அந்த யானையை வனத்திற்குள் விரட்டினர்.இதனிடையே வாயில் புண்ணுடன் சுற்றி திரிந்த யானை நேற்று மதுக்கரை அருகேயுள்ள அய்யாசாமி மலைப்பகுதிக்குள் சென்றது.
இந்நிலையில், இன்று காலை 11 மணியளவில் அந்த யானை உடல் நலக்குறைவினால் உயிரிழந்தது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் யானையின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் வனத்துறை மருத்துவர் மனோகரன் தலைமையிலான மருத்துவ குழுவினர் உடற்கூறு ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளனர்.யானை உடல் நலக்குறைவினால் உயிரிழந்து இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாகவும், உடற்கூறு ஆய்வுக்கு பின்னர் யானை இறப்பிற்கான முழுமையான காரணம் தெரிய வருமென வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதனிடையே கோவை வனக்கோட்டத்தில் நடப்பாண்டில் மட்டும் 11 யானைகள் உயிரிழந்து இருப்பது வன ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கோவையில் யானைகள் இறப்பதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.