May 11, 2016 தண்டோரா குழு
மாஸ்டர் பிளாஸ்டர் என்றழைக்கப்படும், கிரிக்கெட்டின் மிகச் சிறந்த பேட்ஷ்மேன் சச்சின் டெண்டுல்கர்.
இவர் 2014ல் ஔரங்காபாத் மாவட்டத்தில் உள்ள வறட்சியால் பாதிக்கப்பட்ட வாக்லா கிராமத்தின் வளர்ச்சிக்காக, சாலைகள் அமைப்பதற்கும் இன்ன பிற இன்றியமையாத பணிகளுக்குமென தன்னுடைய ராஜ்யசபா நிதியிலிருந்து 1 கோடி வழங்குவதாக உறுதி அளித்தார்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட வாக்லா கிராம மக்கள் தங்களுக்கு உதவ வேண்டுமென்று சச்சின் டெண்டுல்கரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன் படி அவரும் உதவச் சம்மதம் தெரிவித்துள்ளார்.
சச்சின் தரப்பில், சாலைகள் அமைப்பதற்கும், மற்ற பணிகளுக்கும் ஏலம் கோரும் முறையில் கிராம சபா ஒரு மனதாகத் தகுந்த நபரைத் தேர்ந்தெடுத்து, பணியை அவர்களிடம் ஒப்படைக்கும்படி கோரப்பட்டது. அந்த நபர்களின் பெயர்களை அவரிடம் தெரிவிக்கும் பட்சத்தில் அவரால் நேரிடையாக அவர்களுக்கு பணத்தைக் கொடுத்து விடமுடியும் என்றும் கூறப்பட்டது.
எந்தெந்த செலவினங்களுக்கு எப்படி எப்படி தொகை ஒதுக்கப்படவேண்டும் என்பதைக் கிராம சபா மக்கள் கருத்து வேறுபாடின்றி ஒற்றுமையாகத் தீர்மானிக்க வேண்டும் என்று சச்சின் தரப்பில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
அதன்படி அப்சர்வர்ஸ் ரிசர்ச் ஃவுண்டேஷன் (ORF) அமைப்பு அக்கிராமத்திற்கு ஆய்வுக்குச் சென்றது. எந்தப் பணியும் நடைபெறவில்லை என்பதை அறிந்து வியப்பிற்கு உள்ளானது.
அங்குள்ள கிராமசபா மக்கள் சாதி, மத, அரசியல் வேறுபாடுகளினால், ஒருமித்த கருத்தை எட்டமுடியாமல், வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளனர் என்று ரோகிதாஸ் என்ற இளைஞர் அந்தக் குழுவிடம் கூறியுள்ளார்.
இதுவரை பணத்தட்டுப் பாடினால் காரியங்கள் நடைபெறவில்லை. ஆனால் இப்பொழுது மக்களின் சுயகௌரவத்தாலும், சுயநலத்தாலும், ஒற்றுமையின்மையினாலும், வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் கிராமம் முடங்கிக் கிடக்கிறது என்று தெளிவு படுத்தினார்.
வாக்லா கிராமப்பஞ்சாயத்து உறுப்பினர் ஹாட்டில் சிங் சௌதிரி இதை மறுத்துள்ளார்.
இதற்கு முன்பு கிராம மக்கள் ஒற்றுமையின்றி, ஒரு கருத்து எட்ட முடியாமல் இருந்திருந்தாலும், தற்பொழுது மக்கள் அனைவரும் ஒருமித்துச் செயல்பட முனைந்துள்ளனர் என்றும், மீண்டும் சச்சின் டெண்டுல்கரிடம் உதவி கேட்கப் போவதாகவும் கூறியுள்ளார்.
காலியுக்தா சிவார் திட்டம், மாநிலத்தின் நீர்ப் பாதுகாப்புத் திட்டம், போன்ற சிறந்த மக்களுக்குப் பயன் தரக்கூடிய பல திட்டங்கள், மக்களின் உட்பூசலினால் நிறைவேற்றப்படாமல் முளையிலேயே கருகி விட்டன, அல்லது நத்தை வேகத்தில் ஊர்கின்றன என்று ஆராய்ச்சியாளர் நிதீஷ் பானே தனது 180 பக்க அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மற்றும் வறட்சி நிலையைக் கணக்கெடுப்பதில் இவர்கள் இன்னும் பழைய ஆங்கிலேய முறையையே பின்பற்றி வருகிறார்கள்.
மழையின் வரத்து அல்லது, வறட்சி முதலியவை தாலூக்காவின் முக்கிய இடங்களிலுள்ள பயிரின் நிலைமையை ஒட்டியே கணக்கிடுகின்றனர். மற்ற இடங்களில் மழையின் அளவு குறையும் போது, அதைக் கணக்கெடுத்து, வறட்சியைப் பிரகடனப்படுத்தி, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கு நீண்ட தாமதம் ஏற்படுகிறது.
ஒருங்கிணைக்கப்பட்ட அணுகுமுறையைக் கையாண்டு வறட்சி நிலமையை நிர்ணயிப்பது அவசியம் என்றும் அது போன்ற முறையைக் கையாளுவதில்லை என்றும் அபிப்பிராயம் தெரிவித்துள்ளார்.
போதுமான நவீன தொழில் நுட்பக் கருவிகள் உபயோகப்படுத்தப்படுவதில்லை என்பதும் இவரது கருத்து.
முதன் மந்திரியின் தலைமையின் கீழ் ஒரு தனிஇலாகா உருவாக்கி, வறட்சி நிலமையைக் கண்காணிக்கவும், மற்ற துறைகளின் நடவடிக்கைகளை, ஆலோசனைகளைப் பரிசீலனை செய்யவும் ஏற்பாடு செய்வதன் மூலம் விவசாயிகளுக்கு நிவாரண உதவியை செவ்வனே வழங்க முடியும் என்றும் கூறியுள்ளார்.
வறட்சி என்பது தண்ணீர் பற்றாக் குறையினால் மட்டுமன்றி, வேறு பல இயற்கை சீற்றத்தினாலும், சமூக ரீதியிலான பொருள் ரீதியிலான இடர்களாலும் ஏற்படலாம்.
வறட்சி ஏற்பட்டால் அதன் மூலம் தங்களுக்கு ஆதாயம் தேடும் அமைப்புக்களை ஒதுக்குவதன் மூலமும் விவசாயிகளின் நலத்தைப் பேணலாம் என்றும் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.