June 12, 2017 தண்டோரா குழு
சமீபத்தில் நடந்து முடிந்த பிரிட்டன் பொதுத்தேர்தலில் தன்னுடைய கணிப்பு தவறானதால் தான் எழுதிய புத்தகத்தின் பக்கங்களையே பேராசிரியர் ஒருவர் தின்றுள்ளார்.
இங்கிலாந்து கென்ட் பல்கலைக்கழகத்தில் அரசியல் துறை பேராசிரியராக பணியாற்றி வருபவர் மேத்யூ குட்வின். இவர் தனது நண்பருடன் இணைந்து ஐரோப்பிய யூனியனிலிருந்து இங்கிலாந்து விலகியது குறித்து ஒரு புத்தகம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், இவர் சமீபத்தில் நடந்து முடிந்த பிரட்டன் பொதுத்தேர்தலில் ஜெர்மி கார்பின் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கு 38 சதவீதத்துக்கு குறைவான ஓட்டுகள் தான் கிடைக்கும் என்று தெரிவித்திருந்தார்.மேலும் தன் கணிப்பு நடக்காவிட்டால் எனது புத்தகத்தை தின்பேன் என்றும் மேத்யூ டுவிட்டரில் சவால் விடுத்திருந்தார்.
ஆனால், நடந்த பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சிக்கு 40.3 % ஓட்டுகள் கிடைத்தன. இதனையடுத்து மேத்யூவின் கணிப்பு பொய்யானதால் சொன்ன வார்த்தை என்னானது என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்தனர்.
இந்நிலையில், அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக மேத்யூ குட்வின் ஸ்கை தொலைகாட்சியின் நேரடி ஒளிபரப்பின் போது, நான் சொன்ன சொல்லை காப்பாற்றுபவன் என்றும் என் கணிப்பு தவறாக போய்விட்டதால், நான் எழுதிய புத்தகத்தை இப்போதே தின்கிறேன் எனக் கூறி அவரது புத்தகத்தை கடித்து மென்று தின்றார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.