June 14, 2017 தண்டோரா குழு
டெல்லியில் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலைகளை தினந்தோறும் நிர்ணயிக்கும் முறையை இந்தியாவில் முதல் கட்டமாக 5 நகரங்களில் எண்ணெய் நிறுவனங்கள் கடந்த மாதம் அறிவித்திருந்தது. இதையடுத்து வரும் 16ம் தேதி முதல் இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலைகளை தினந்தோறும் நிர்ணயிக்கும் இந்த நடைமுறையை அமல்படுத்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினமும் நள்ளிரவில் நிர்ணயிக்க எதிர்ப்பு தெரிவித்து ஜூலை 16 முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் டெல்லியில் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுடன் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு நள்ளிரவு 12 அமலாகும் விலை மாற்ற அறிவிப்பு காலை 6 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் வேலைநிறுத்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.