June 15, 2017
தண்டோரா குழு
அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரனுடன் மேலும் 2 அ.தி.மு.க எம்.எல்.ஏ.,க்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இதனிடையே சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில் டிடிவி. தினகரனை அதிமுக எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.க்கள் கடந்த சில நாட்களாக சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதே போல் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பழனியப்பன், தோப்பு வெங்கடாச்சலம் ஆகியோர் தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
இதுவரை 32 எம்.எல்.ஏ.க்கள் தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அம்பத்தூர் எம்.எல்.ஏ. அலெக்சாண்டர், அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்னசபாபதி ஆகிய இருவரும் அவரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். தற்போது தினகரனின் ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.