May 12, 2016 தண்டோரா குழு
ஆசிய பூனைகளில் சியாமீ பூனை நன்கு அறியப்பட்ட இனம். இது 20ம் நூற்றாண்டில், ஐரோப்பிய நாடுகளிலும் மேற்கு அமெரிக்காவிலும் மிகவும் பிரபலமானது.
அமெரிக்க நாட்டில் ரோனல்ட் ரீகன் 40வது ஜனாதிபதியாக இருந்த போது பிறந்த ஒரு சியாமீ பூனை உலகில் அதிக வயதான பூனை என்று கின்னஸ் உலக சாதனை நிறுவனம் அறிவித்து உள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள மான்ச்பீல்த் என்னும் நகரில் வசிக்கும் ஸ்கூட்டர் என்னும் பூனை மார்ச் 26ல் அதனுடைய 30வது பிறந்த நாளை மிக விமரிசையாகக் கொண்டாடியது என்று கின்னஸ் நிறுவனம் தெரிவித்தது.
அதனுடைய உரிமையாளர் கெயில் ப்லோயிட் கூறும்போது, “ஸ்கூட்டர் சுறுசுறுப்பாக எப்பொழுதும் தன்னை வைத்துக் கொள்வாள். அவளுக்குப் பிரயாணம் செய்வதில் அதிக விருப்பம் உண்டு. இதுவரை அமெரிக்காவில் உள்ள 50 மாநிலங்களில் 45 மாநிலங்களில் சுற்றிப்பார்த்து விட்டாள்” என்று அவர் கூறினார்.
மேலும், “குளித்து விட்டு முடி உலர்த்தியைக் கொண்டு அதனை பிரஷ் செய்வது அவளுக்கு மிகுந்த சுகத்தை தருமெனவும், மாலை சிற்றுண்டிக்கு கோழி இறைச்சியை உண்பது அவளுக்குப் பிடிக்கும், எனவும் அவர் பகிர்ந்து கொண்டார். “இவைதான் ஸ்கூட்டர் உடைய நீண்ட வாழ்நாளுக்குக் காரணம்” என்றும் அவளுடைய உரிமையாளர் தெரிவித்தார்.
இது குறித்து கின்னஸ் சாதனை புத்தகவியலாளர்கள் கூறும் போது, “ஸ்கூட்டர் தான் இப்பொழுது உயிர் வாழும் அதிக வயதுடைய பூனை. ஆனால் இதற்கு முன் டெக்சாஸ் மாகாணத்தில் ஒரு பூனை 38 வயது வரை வாழ்ந்துள்ளது,” என்று தெரிவித்தனர்.