June 19, 2017 தண்டோரா குழு
15 பயனாளிகளுக்கு ரூ.11.95லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் வழங்கினார்.
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரனிடம் அளித்தனர்.
பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து, மாவட்ட சமூக பாதுகாப்புதிட்டத்தின் மூலம் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 3 பயனாளிகளுக்கு தலா ரூ.3லட்சம் வீதம், ரூ.9.லட்சமும், வறுமையில் மிகவும் பினதங்கியவர்களின் வாழ்வாதாரத்திற்கு பெட்டிக்கடை வைக்க, தையல் இயந்திரம் வாங்க, மாணவ, மாணவியர்களின் கல்வியினை தொடாந்து கற்க நிதியுதவி என 12 பயனாளிகளுக்கு ரூ.2.95 இலட்சம் மதிப்பில் தன்விருப்ப கொடை நிதியிலிருந்தும் என மொத்தம் 15பயனாளிகளுக்கு ரூ.11.95லட்சம் மதிப்பிலான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், துணை ஆணையர் (கலால்) பாலகிருஷ்ணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலர் சுரேஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணமூர்த்தி, ஆதி திராவிட நல அலுவலர் மோகன், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.