June 19, 2017
தண்டோரா குழு
எம்.எல்.ஏ வீடியோ விவகாரம் தொடர்பாகஎதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கொடுத்த மனு மீது சபாநாயகர், தலைமை செயலர் நடவடிக்கை எடுக்க ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்த போது எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அவருக்கு ஆதரவு தெரிவிக்க எம்.எல்.ஏக்கள் 2 கோடி ரூபாய் வரை பணம் வாங்கியதாக எம்.எல்.ஏ சரவணன் பேசிய வீடியோ தனியார் தொலைகாட்சியில் வெளியானது.
இதையடுத்து, இதுகுறித்து சட்டபேரவையில் விவாதிக்க எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் அனுமதி கோரினார். ஆனால், சபாநாயகர் பத்திரிகைகளில் வெளியானதை வைத்து சட்டபேரவையில் விவாதிக்க முடியாது என அனுமதி மறுத்தார். இதனால் திமுகவினர் சட்டபேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதனைத்தொடர்ந்து, சென்னை வந்த தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர்ராவை மு.க.ஸ்டாலின் சனியன்று சந்தித்து கோரிக்கை அடங்கிய மனுவை அளித்தார். அந்த மனுவில், எம்எல்ஏக்களுக்கு பணம் வழங்கியது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு உத்தரவிட வேண்டும். இந்த விவகாரத்தில் ஆளுநர் தலையிட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில், எம்.எல்.ஏ.க்கள் பேரம் பேசப்பட்ட விவகாரத்தில் ஸ்டாலின் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகர், தலைமைச் செயலருக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதிமுக எம்எல்ஏக்களின் பண பேர விவகாரம் தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் சட்டப்பேரவை செயலாளர் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.