June 20, 2017 தண்டோரா குழு
கோவையில் கைது செய்யப்பட்ட நீதிபதி கர்ணன் தன்னை கைது செய்ய வேண்டிய அவசியம் ஏன் ?என கேள்வி எழுப்பியுள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்டட நீதிபதி கர்ணன் கடந்த ஒரு மாதமாக தலைமறைவாக இருந்தார். இந்நிலையில், கோவையில் மூன்று நாட்கள் முகாமிட்ட கொல்கத்தா போலீசார் கோவை மலும்பிச்சம்பட்டியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்கி இருந்த நீதிபதி கர்ணனை கைது செய்தனர்.
இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நீதிபதி கர்ணன்,
நீதித்துறையில் லஞ்சம் இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் சொல்கிறது. நான் இருக்கக் கூடாது என சொல்கிறேன் இதற்காக இந்த வழக்கு. இதற்காக நான் கைது செய்யப்பட வேண்டிய அவசியம் ஏன்? என கேள்வி எழுப்பினர்.
மேலும், துப்பாக்கிகளுடன் வந்த போலீசார் என்னை கைது செய்தனர். காவல்துறை மீது எந்தவித குறைபாடும் சொல்ல முடியாது. நாட்டின் நன்மைக்காக நான் போராடுகிறேன் ஆனால் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அவர்கள் தனிப்பட்ட விஷயத்திற்காக போராடுகிறார்கள். நான் தீவரவாதி இல்லை. நீதித்துறையில் ஜாதி, ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. இதை எதிர்த்து தொடர்ந்து போராடுவேன் என்றார்.