June 22, 2017 தண்டோரா குழு
திருப்பூர் அருகே காதுகேளாதோர் பள்ளியை மூட எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணகான மாணவ மாணவிகள் நேற்று(புதன்கிழமை) உண்ணாவிரதம் மற்றும் தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூரை அடுத்த கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட செம்மாண்டாம்பாளையத்தில் காதுகேளாதோர் பள்ளி செயல்பட்டு வருகிறது. ஆறாம்வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் 110 மாணவ மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சிலமாதங்களுக்கு முன் கேரள மாநிலத்தை சேர்ந்த கெளரி என்பவர் இதே பள்ளியில் தான் படித்த போது பள்ளியின் தாளாளர் முருகசாமி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக காவல்துறையில் புகார் அளித்தார்.
மேலும் இதற்கு உடந்தையாக ஐந்து நிர்வாகிகள் தன்னை மிரட்டியதாகவும் புகார் அளித்ததை தொடர்ந்து முருகசாமி உள்ளிட்ட ஐந்துபேரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
இதனிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட கோவைமாவட்ட நிர்வாகம் கடந்த 15 ஆம்தேதி முதல் இப்பள்ளியை மூட உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் புதன்கிழமை பள்ளிக்கு வந்த மாற்றுதிறனாளிகளுக்கான நலவாரிய அதிகாரிகள் பள்ளி மூடுவதற்காக உத்தரவை கொடுத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மறுத்தனர்.
பள்ளியில் வாயில் முன்பாக நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் அமர்ந்து கொண்டு உண்ணாவிரதம் மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் பெற்றோர்களிடமும், மாணவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதனையடுத்து உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டனர்.