June 22, 2017 தண்டோரா குழு
கூவத்தூரில் எம்.எல்.ஏ.,க்களிடம் பேரம் பேசப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ விசாரணை தேவையில்லை என முதல்வர் பழனிசாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பேரம் பேசப்பட்டது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி வீடியோ ஆதாரம் ஒன்றினை கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
எம்.எல்.ஏ. வீடியோ விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை அமைக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இந்நிலையில், முதல்வர் பழனிசாமி சார்பில் தாக்கலான பதில் மனுவில் நம்பிக்கை ஓட்டெடுப்பு விவகாரம் சபாநாயகர் அதிகாரத்திற்கு உட்பட்டது. இதில் சிபிஐ., தலையிட முடியாது. எனவே சிபிஐ., விசாரணை தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து முதலமைச்சர் அளித்த பதிலுக்கு விளக்கம் அளிக்க கால அவகாசம் தேவை என்று திமுக சார்பில் உடனடியாக மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்ற நீதிபதிகள் விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளனர்.