June 23, 2017 தண்டோரா குழு
ஒருங்கினைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்டத்தின் கீழ் அரசு பணியாளர்களின் பணிப் பதிவேடு கணினிமயாமாக்கப்படுதல் தொடர்பான பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் தொடங்கி வைத்தார்.
கோவை மாவட்டத்தில் ஒருங்கினைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்டத்தின் கீழ் அரசு பணியாளர்களின் பணிப் பதிவேடு கணினிமயாமாக்கப்படுதல் தொடர்பான பயிற்சி வகுப்பு இன்று நிர்மலா கலைக்கல்லூரி கூட்டரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் கலந்து கொண்டு பயிற்சி வகுப்பினை தொடங்கிவைத்து பேசியதாவது;
“நிதி மேலாண்மை தொடர்பான அரசுப் பணிகள் திறம்பட நடைபெற மாநில அரசு நிதி மேலாண்மை மற்றும் மாநில அரசு மனிதவள மேலாண்மையை இணைத்து ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்திட்டம் நடைமுறைபடுத்தப்பட உள்ளது.
தற்பொழுது நடைமுறையில் உள்ள தன்னியக்க கருவூலப் பட்டியல் ஏற்பளிக்கும் முறை,வலைதள சம்பளப்பட்டியல் மற்றும் மின்னணு வழி ஓய்வூதியம் ஆகியன இத்திட்டத்தில் சேர்க்கப்படவுள்ளன. இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்காக ரூ288.91 கோடி அரசு நிதியானது ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தினைச் செயல்படுத்துவதற்கு திட்ட ஒருங்கிணைப்பு நிறுவனமாக ஒரு தனியார் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தினைச் செயல்படுத்தக்கூடிய அலுவலகங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கான பணிகளும் மென்பொருள் உருவாக்கும் பணிகளும் தற்சமயம் நடைபெற்று வருகின்றது.
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் கோவை மாவட்டம் முழுவதும் உள்ள சுமார் 768 பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் நேரடி இணையத்தின் மூலம் சம்பளப்பட்டியலை கருவூலத்தில் சமர்ப்பிக்க இயலும்.
மேலும் இத்திட்டத்தில் மாநிலத்தின் நிதி நிலை விபரம் உடனுக்குடன் அரசுக்குக் கிடைப்பதுடன் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை நிர்வாகம் சிறப்பாக நடைபெற வழிவகுக்கும் தேவையற்ற காலதாமதமும் முறைகேடுகளும் தவிர்க்கப்படும்.
இத்திட்டத்தின் மூலம் சுமார் 33869 அரசுப் பணியாளர்களின் பணிப்பதிவேடு பராமரிப்பு எளிமையான முறையில் கணினிமயமாக்கப்பட்டு சம்பளப்பட்டியல்,பதவி உயர்வு,மாறுதல்கள்,விடுப்பு மற்றும் இதர விபரங்கள் அவ்வப்போது உடனுக்குடன் பதியப்படும்.
அரசுப் பணியில் தேர்வு செய்யப்பட்ட நிலையில் இருந்து ஓய்வு பெறும் வரை உள்ள அரசுப் பணியாளர்களின் பணி வரலாறானது முழுமையாக இத்திட்டத்தின் மூலம் கணினிமயமாகிறது.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மண்டல கருவூல இணை இயக்குநர் செல்வசேகரன் மாவட்ட கருவூல அலுவலர் நடராஜன் மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) சேஷாத்ரி, உதவி கருவூல அலுவலர்கள் சபாபதிஉட்பட பலர் கலந்துகொண்டனர்.