May 14, 2016
தண்டோரா குழு.
நாளை மறுதினம் நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களித்து நூறு சதவிகித வாக்குப்பதிவை எட்ட வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் பகீரத முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்குமுன் பட பூஜை விழாவில் கலந்துகொண்ட கமல்ஹாசன், எனது ஓட்டைக் கடந்த முறை யாரோ மாற்றிப் போட்டுவிட்டார்கள் என்பதால் இந்தமுறையும் போடுவது சந்தேகமே எனத் தெரிவித்திருந்தார். மேலும் வாக்குப்பதிவு அன்று தான் படப்பிடிப்பிற்காக வெளிநாடு செல்வதாக தெரிவித்த கமல் தன்னுடைய பெயர் தற்போது வாக்காளர் பட்டியலில் இல்லை எனக் குற்றம்சாட்டினார். இதையடுத்து தேர்தல் ஆணையம் கமல் மற்றும் கவுதமியின் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை வெளியிட்டு பதிலடி கொடுத்தனர். ஆனால் இது குறித்து கமல் விளக்கம் கொடுக்கவில்லை. வரும் திங்களன்று தான் அவர் ஜனநாயக கடமை ஆற்றுவாரா இல்லையா எனத் தெரியவரும்.
அதே போல கடந்த ஏப்ரல் 30ம் தேதி குடும்பத்துடன் இருவார ஓய்விற்காக அமெரிக்கா சென்ற சூர்யா தற்போதும் அமெரிக்காவில் தான் உள்ளார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் தமிழக மக்கள் அனைவரும் கட்டாயம் வாக்களித்து நூறு சதவிகிதம் வக்குப்பதிவை உறுதி செய்யவேண்டும் என ஆயிரம் முறை விளம்பரத்தில் கூறியிருப்பார். இந்நிலையில் அவரே வந்து ஒட்டு போடவில்லை எனில் அவரது ரசிகர்கள் அனைவரும் ஒட்டு போடுவார்களா என்பதே சந்தேகமாகிவிடும். இந்நிலையில் திங்கள் அன்றுதான் இருவரும் ஜனநாயக கடமை ஆற்றுவார்களா இல்லையா என்பது தெரியும்.