June 23, 2017 தண்டோரா குழு
புரொபைல் பிக்சர்களைப் பாதுகாப்பதற்காக பேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதிக்காக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சமூகவலைதளமான பேஸ்புக்கில் அடுத்தவர்கள் புரொபைல் பிக்சர்களை யார் வேண்டுமானாலும் எளிதில் டவுன்லோட் செய்து கொள்ளலாம். இதனால் பல பெண்கள் அச்சப்பட்டு தங்கள் நிஜ புகைப்படங்களை பேஸ்புக்கில் பகிராமல் இருந்தனர். இதையடுத்து, அடுத்தவர்கள் புரொபைல் பிக்சர்களைப் பாதுகாப்பதற்காக பேஸ்புக் நிறுவனம் புதிய வசதியை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பெண்கள் பாதுகாப்பிற்காக பேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதிக்காக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேஸ்புக் நிறுவனத்தை பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
இந்த வசதி இந்தியாவில் ஆன்லைன் பாதுகாப்பினை உறுதி செய்யும் என்றும் குறிப்பாக பெண்களின் பாதுகாப்பை இது உறுதி செய்யும் என்றும் பதிவிட்டுள்ளார்.
மேலும், பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை இயக்குனர் ஷெரீல் சேன்ட்பெர்க்கின், ஆன்லைனில் பெண்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் நாம் முன்னெடுக்க வேண்டும். ஏனெனில் பெண்களுக்கு நீங்கள் பாதுகாப்பு அளித்தால், சமூகத்துக்கே பாதுகாப்பு அளிப்பது போல என்ற கருத்தை மேற்கோள் காட்டி பினராயி விஜயன் தனது பதிவை பதிவிட்டுருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.