June 23, 2017 தண்டோரா குழு
சிக்கன் சாப்பிட ஒரு வாரம் லீவு வேண்டும் என கேட்ட ரயில்வே ஊழியரின் விண்ணப்பம் சமூகவலைதளத்தில் வைராலாக பரவி வருகிறது.
பள்ளி, கல்லூரி, அலுவலங்களில் பணிபுரிவோர் விடுமுறை வேண்டும் என தங்கள் உயரதிகாரிகளுக்கு விடுப்பு விண்ணப்பம் அளிப்பது வழக்கம். அதிலும் பெரும்பாலானோர் உடல்நிலை சரியில்லை, அல்லது சுற்றுலா, வெளியூர் செல்வதற்காக விடுமுறை கேட்பது வழக்கம்.
ஆனால், சத்தீஸ்கர் மாநிலத்தில் பிலாஸ்பூர் ரயில்நிலையத்தில் பணிபுரிந்து வரும் பகைராஜ் கோண்ட் என்பவர் கடந்த ஜூன் 17ல் மிகவும் வித்தியாசமாக ஒரு வாரத்திற்கு விடுமுறை கேட்டுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் பருவமழை தொடங்கும் போது புனித சர்வான் என்ற இந்து பண்டிகை கொண்டாடப்பட்டு வருகின்றது.இந்த பண்டிகை தொடங்கியதும், ஒரு மாதத்திற்கு அசைவ உணவை சாப்பிடக்கூடாது என்பது வழக்கம்.
இதனால் பகைராஜ் கோண்ட் தனது விண்ணப்பத்தில், புனித ஷ்ரவான் மாதம் ஒருவாரத்தில் தொடங்க இருக்கிறது. அந்த மாதம் தொடங்கினால் என்னால் கோழி இறைச்சி உணவை எடுத்துக் கொள்ள முடியாது. எனவே, ஷ்ரவான் மாதம் தொடங்குவதற்கு முன்பாக கோழி இறைச்சி உணவை எடுத்துக் கொள்ள ஜூன் 20 முதல் 27ம் தேதி வரை விடுமுறை அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கோழி இறைச்சியை எடுத்துக் கொள்ளாவிட்டால், உடல் பலவீனமடைந்து, தனது வேலையினை சரிவர செய்ய முடியாது என்றும் கோண்ட் கூறியிருக்கிறார். தற்போது அவரது இந்தக் கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.